புதுடெல்லி: இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு பாலி தீவுக்குச் சென்றார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இதையொட்டி, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தோனேசியா தலைமையில் நடைபெறும் 17-வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நவம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை பாலி தீவுக்குப் பயணம் மேற்கொள்கிறேன். இந்த மாநாட்டின்போது ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன், உலகின் முக்கிய விவகாரங்கள் குறித்தும் பேசுவேன்.
ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
நவம்பர் 15-ம் தேதி பாலியில் வசிக்கும் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர்களோடு கலந்துரையாட உள்ளேன்.
பாலி உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியின்போது, நமது நாட்டுக்கும், மக்களுக்கும் மிக முக்கியத் தருணமாக, ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளார். டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு, ஜி- 20 நாடுகளின் உறுப்பினர்களையும், பிற அழைப்பாளர்களையும் தனிப்பட்ட முறையில் அழைக்க உள்ளேன்.
ஜி-20 உச்சி மாநாட்டில் என்னுடைய உரைகளின் போது, இந்தியாவின் சாதனைகளையும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் அயராத உறுதிப்பாட்டையும் எடுத்துரைக்க உள்ளேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் நேற்று நள்ளிரவு தரையிறங்கிய பிரதமர் மோடி, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பாலியின் மாங்குரோவ் காடுகளை அவர் இன்று பார்வையிடுகிறார். தொடர்ந்து, ஜி-20 மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
நாளை ஜி-20 மாநாட்டின் 2-வது நாள் அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேச உள்ளார். குறிப்பாக, இங்கிலாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசுவார் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago