உலகக் கோப்பையில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும்: ஃபிபா முன்னாள் தலைவர்

By செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஃபிபா (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அமைப்பின் முன்னாள் தலைவர் செப் ப்ளேட்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செப் ப்ளேட்டர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “நடக்கவிருக்கும் உலககோப்பை தொடரிலிருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும். நான் ஃபிபா அமைப்பின் தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் தொடரிலிருந்து ஈரானை நீக்கி இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது மனித உரிமை மீறல்களை ஈரான் கட்டவிழ்த்து விடுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் குற்றம் சுமத்தி இருந்தன. இது தொடர்பாக ஈரான் பாதுகாப்பு அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது.

கடந்த 6 வாரங்களாக ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட மாணவர்கள் என இதுவரை 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 277 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்று ஐ. நா கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஈரானின் போராட்டக்காரர்கள் மீது நடத்தும் வன்முறையை கைவிட வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE