ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற மந்திரம் உலக நலனுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் மந்திரம் உலக நலனுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்பிற்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தியா தலைமை வகிக்க உள்ளது. இதை முன்னிட்டு, இதற்கான லோகோ, இணையதளம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உலகமே ஒரு குடும்பம் என்பது உலகிற்கான இந்தியாவின் தனித்துவமான சிந்தனை.

சுதந்திரம் அடைந்த பிறகு வளர்ச்சிக்கான பயணத்தை நாம் தொடங்கினோம். நாம் தற்போது அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கு கடந்த 75 ஆண்டுகளில் அமைந்த அனைத்து அரசுகளுக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு இருக்கிறது. அவர்களின் கடும் உழைப்பின் காரணமாகவே இந்த உயரம் சாத்தியமாகி இருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்கும் நோக்கில் ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு மின் உற்பத்தியகம் என்ற அடிப்படையில் உலகை இந்தியா வழிநடத்தி வருகிறது. ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்தியாவின் மந்திரம். ஜி20 நாடுகளின் தலைமையை ஏற்க இருக்கும் இந்தியா காட்டும் இந்த பாதை, உலக நலனுக்கு வழிவகுக்கும்” என்று அவர் பேசினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, பிரேசில், சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேஷியா உள்ளிட்ட 20 நாடுகள் ஜி20 கூட்டமைப்பில் உள்ளன. இந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேஷியாவிடம் இருந்து இந்தியா பெற்றுள்ளது. ஜி20 தலைமை வகிக்கும் ஓராண்டு காலகட்டத்தில் நாடு முழுவதும் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் உள்பட உலகின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். இத்தகைய ஒரு மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE