காபூல்: ஆப்கானிஸ்தானில் பருவ வயது சிறுமிகள் பள்ளிகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த 1994-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பஸ்தூன் இன மாணவர் சங்கங்களால் தலிபான் அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது அங்கு ரஷ்யாவின் ஆதரவு பெற்ற அரசு ஆட்சி நடத்தி வந்தது. கடந்த 1995-ல் ஹெராட் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றினர். கடந்த 1998-ல் நாடு முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட தலிபான்கள், ஆட்சியில் அமர்ந்த பிறகு அந்த நாட்டுக்கு எதிராக திரும்பினர். தலிபான்களின் ஆசி பெற்ற அல்-காய்தா தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3,000 பேர் உயிரிழந்தனர். 6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து தலிபான்களின் ஆட்சியை அகற்றியது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். அவர்களின் ஓராண்டு ஆட்சியில் அடிப்படைவாதம் தலைதூக்கி, பெண்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன.
புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. வேறு ஆண்களுடன் பேசினால் பொது இடத்தில் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுகின்றனர். முந்தைய ஆட்சியில் அலுவலக பணிக்குச் சென்ற பெண்கள் இப்போது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் 5-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி பயில தடை விதித்தனர். இதன்படி மகளிருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.
எனினும், பெண் கல்வியில் அக்கறை கொண்ட சில பள்ளி நிர்வாகங்கள், மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. இதன்படி பள்ளியின் ரகசிய இடங்களில் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க தலிபான் வீரர்கள் நாடு முழுவதும் திடீர் ஆய்வு செய்துவருகின்றனர். அவர்கள் பள்ளிகள்தோறும் சென்று பருவ வயது சிறுமிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
இதுகுறித்து காந்தஹார் நகரை சேர்ந்த மாணவி ரஷியா (14) கூறும்போது, “நான் படித்த பள்ளியில் தலிபான்கள் அண்மையில் சோதனை நடத்தினர். அப்போது 13 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இதனால் சுமார் 30 லட்சம் மாணவிகள் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துள்ளனர்’’ என்றார்.
அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரினா அம்ரி கூறும்போது, “ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள். தலிபான்களின் ஆட்சியில் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமை மறுக்கப்பட்டுள்ளது, சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது. 5-ம் வகுப்புக்கு மேல் சிறுமிகள் கல்வி கற்கக்கூடாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம்" என்று கேள்வி எழுப்பினார்.
ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ரிச்சர்ட் பென்னட் நேற்று கூறும்போது, “தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தலிபான்களின் முந்தைய ஆட்சியைவிட இப்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆப்கன் பெண்களுக்கு எதிரான அநீதியை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும். அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.
தலிபான்களுக்கு சவால் விடும் ஹசாரா பெண்கள்
ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் 10% பேர் ஹசாரா பழங்குடிகள் ஆவர். இவர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். சன்னி பிரிவைச் சேர்ந்த தலிபான் ஆட்சியாளர்கள், ஹசாரா பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளை புறக்கணித்து வருகின்றனர். இதனால் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
எனினும் ஹசாரா பழங்குடி மக்கள், பெண் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். அவர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் மகளிருக்கான பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நடத்தப்படுகின்றன. இதில் சன்னி பிரிவு மாணவிகளும் படிக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தலைநகர் காபூலில் ஹசாரா பழங்குடிகள் நடத்தும் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 43 மாணவிகள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர். ஹசாரா பெண்கள் கல்வி கற்பதை தடுக்கவே தலிபான்கள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
எனினும் அச்சுறுத்துல்களுக்கு அஞ்சாமல் ஹசாரா மக்கள், மகளிர் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த கல்வி நிலையங்களுக்கு பல கி.மீ. தொலைவில் இருந்து ஹசாரா மாணவிகள் மோட்டார் சைக்கிள்களில் பள்ளிகளுக்கு செல்கின்றனர். தலிபான்களுக்கு சவால் விடுக்கும் ஹசாரா பழங்குடி மாணவிகளுக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago