ஈரான் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈரானில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் ஷிராஸ் மாநகரில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கான வழிபாட்டுத் தலத்தில் கடந்த 26-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குலை வன்மையாக கண்டித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், பாதுகாப்புப் படையிடம் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதை இந்த தாக்குதல் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாகவும், அனைத்து வகையான தீவிரவாதத்திற்கும் எதிராக உலகம் ஒன்றுபட வேண்டிய நேரம் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்திற்காக மாஷா அமினி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் அரசுக்கு எதிராக குர்துக்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமாகியுள்ளது. ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE