ஈரான் போராட்டத்தில் 28 குழந்தைகள் உயிரிழப்பு: விமர்சிக்கும் சமூக அமைப்புகள்

By செய்திப்பிரிவு

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை 28 சிறுவர், சிறுமியர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மாஷா அமினியின் மரணத்துக்குப் பிறகு ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் இதுவரை 70க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். போராட்டத்தில் 28 சிறுவர் சிறுமியரும் இறந்துள்ளதாக அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஈரான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தலைநகர் தெஹ்ரானில் செயல்படும் குழந்தைகள் நல அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 28 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் பலுசிஸ்தான் பகுதியில் நடந்துள்ளது. இறந்த குழந்தைகளின் குடும்பங்கள் இருட்டில் தள்ளிவிடப்பட்டுள்ளன. இதற்கு ஈரான் அரசு பதிலளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த மரணங்களுக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்பட வேண்டும். போராட்டத்தில் பங்கு கொண்ட ஏராளமான சிறார்களை ஈரான் பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரையும் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மாஷா கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவர் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார்.

மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE