பூமியை நோக்கி வந்த விண்கல்லை திசை மாற்றிவிட்டோம்: நாசா பெருமித தகவல்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: பூமியை தாக்க வந்த விண்கல் ஒன்றை நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக திசைத் திருப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதை நாசேவே தெரிவித்துள்ளது.

குளிர்சாதன பெட்டியைவிட இரு மடங்கு அளவிலான டிமார்போஸ் (Dimorphos) என்ற விண்கல் ஒன்று பூமியின் மீது மோத இருந்ததாக நாசா தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அந்த விண்கல்லை திசைத் திருப்ப டார்ட் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. கடந்த மாதம் 27-ம் தேதி டார்ட் விண்கலம், அந்த விண்கல்லின் மீது துல்லியமாக மோதியது. இதன் மூலம் அந்த விண்கல் எதிர்பார்த்தபடி திசை மாறி சென்றதா என்ற பதிலுக்காக நாசா காத்திருந்தது.

இந்த நிலையில்தான், அந்த விண்கல் சரியாக திசை மாறி சென்றுள்ளதாக நாசா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நாசாவின் தலைமை விஞ்ஞானி பில் நெல்சன் கூறும்போது, “பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட விண்கல் வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. 11 மணி 55 நிமிடமாக இருந்த விண்கல்லின் சுற்றுப் பாதையானது, விண்கலம் மோதலுக்கு பிறகு 11 மணி 23 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விண்கல்லின் சுற்றுப் பாதையானது 32 நிமிடங்கள் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் விண்கல்லால் பூமிக்கு ஏற்பட இருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பூமியின் பாதுகாவலராக நாசா இருப்பதை நாங்கள் காட்டியுள்ளோம்” என்று தெரிவித்தார்

டார்ட் (Double Asteroid Redirection Test) விண்கலம் என்பது ஒரு சோதனை திட்டமாகும். தற்போது இந்த சோதனைத் திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்களை திசை மாற்றுவது சாத்தியம் என நாசா நிரூபித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE