ஈரான் ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவாக ‘ஆடைத் துறப்பு’ வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈரான் பெண்கள் நடத்தும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு உலகளவில் பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரான் நடிகை எல்னாஸ் நோரூசி ‘ஆடைத் துறப்பு’ வீடியோ மூலம் தனது ஆதரவை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து எல்னாஸ் நோரூசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடும்போது, “பெண்கள் இந்த உலகில் எங்கிருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் அவள் விரும்பியதை எப்போதும், எங்கு வேண்டுமானாலும் அணிய உரிமை வேண்டும். எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் அவளை விமர்சிக்கவோ, தீர்மானிக்கவோ அல்லது வேறுவிதமாக ஆடை அணியச் சொல்லவோ உரிமை இல்லை.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்றால் முடிவெடுக்கும் அதிகாரம் என்பதே. ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் உடலைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். நான் இங்கு நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை, சுதந்திரத்தை ஊக்குவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டும் வீடியோவையும் இணைத்துள்ளார். இதுவும் ஒரு துணிவுமிக்க போராட்ட வடிவம் என நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.

யார் இவர்? - ஈரானை சேர்ந்த எல்னாஸ் நோரூசி 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவில் மாடலாக இருந்து வருகிறார். கதக் உள்ளிட்ட நடனங்களை இந்தியாவில் பயின்றிருக்கிறார். 2018-ஆம் ஆண்டு நெட்ஃபிளக்ஸில் வெளியான ‘சாக்ரெட் கேம்’ (sacred games) தொடரிலும் எல்னாஸ் நோரூசி நடித்திருக்கிறார்.

பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாஷா கோமா நிலைக்கு சென்றார். இதில் அவர் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார்.

மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, ஈரானின் முக்கியத் தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE