காந்தியின் அகிம்சை கொள்கையை பரப்ப வேண்டும்: முஸ்லிம் உலக லீக்

By செய்திப்பிரிவு

ரியாத்: இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை பரப்ப வேண்டும் என்று முஸ்லிம் உலக லீக் அழைப்பு விடுத்துள்ளது.

சவுதி அரேபியாவின் மெக்கா நகரை தலைமையிடமாகக் கொண்டு முஸ்லிம் உலக லீக் அமைப்பு செயல் படுகிறது. உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான இதில், 139 நாடுகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். முதல் முறையாக இந்த அமைப்பு மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளது. மேலும், இதுதொடர்பாக முஸ்லிம் உலக லீக் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை ஐ.நா. சபை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்துள்ளது. தொலைநோக்கு சிந்தனையாளரான காந்தியை நினைவுகூர்ந்து அவரது அகிம்சை பாதையில் நடக்க வேண்டும். அவரது பிறந்த நாளை நாம் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாட வேண்டும். கல்வி மூலமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் அவரது அகிம்சை கொள்கைகளைப் பரப்ப வேண்டும்.

என்று முஸ்லிம் உலக லீக் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நட்புறவை வளர்த்து வருகிறார். இதற்கு முன்பு இருந்த பிரதமர்களைவிட அதிக இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணம் செய்த பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் அபுதாபிக்கு பிரதமர் மோடி சென்றபோது அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா பேணி வரும் நட்புறவு காரணமாக முஸ்லிம் உலக லீக் முதல் முறையாக காந்தி ஜெயந்தியை கொண்டாடி உள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய அரசியல் நோக்கர்கள் கூறும்போது, "இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை பரப்ப வேண்டும் என்று முஸ்லிம் உலக லீக் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் சகிப்புத்தன்மையை அந்த அமைப்பு பாராட்டியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE