ரஷ்ய போரின் வீச்சு உலக நாடுகளை பாதிக்கிறது; உடனே நிறுத்துங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை

By செய்திப்பிரிவு

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 8 மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் போரை தீவிரப்படுத்தப்போவதாக பகிரங்கமாக தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் போரின் வீச்சு ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்யும் பிரச்சினை. இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக போரை நிறுத்திவிட்டு வெறுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி சொன்னதுபோல் போர்களுக்கான காலம் முடிந்துவிட்டது. போர்கள் நடந்தாலும் கூட அங்கே மனித உரிமை மீறல்களும், சர்வதேச போர் உத்திகள் சட்டங்கள் மீறலும் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் உடனே அது குறித்து விசாரிக்க வேண்டும்.

இது உலகமயமாக்கப்பட்ட உலகம். இங்கு ஒரு பகுதியில் நடக்கும் போரும் பிரச்சினையும் எல்லைகள் தாண்டி வெகு தூர பிராந்தியங்களிலும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, உரங்கள், எரிபொருளுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. அதனால் நம் முன் இன்னும் என்னவெல்லாம் சவால் வருமோ என்று கவலை கொள்ள வேண்டிய தருணத்தில் உலகம் இருக்கிறது. ஆகையால் உடனடியாக போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை பாதைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் திரும்ப வேண்டும் என்று ஜெய்சங்கர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE