இங்கிலாந்தின் விண்ட்சர் கேஸ்டில் தேவாலய வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் எலிசபெத் மகாராணியின் உடல் நல்லடக்கம்

By செய்திப்பிரிவு

லண்டன்: மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், விண்ட்சர் கேஸ்டில் பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உட்பட 2,000 வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், கோடைகாலத்தை முன்னிட்டு, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்தார். முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், லண்டன் திரும்பாமல் அங்கேயே ஓய்வெடுத்து வந்தார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸை கடந்த 6-ம் தேதி நியமனம் செய்தார். அடுத்த நாள் ராணியின் உடல்நிலை மோசமடைந்து. 8-ம் தேதி அவர் தனது 96-வது வயதில் காலமானார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் கடந்த 1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இரண்டாம் எலிசபெத் பிறந்தார். இவரது தந்தையும் இங்கிலாந்து மன்னருமான 6-ம் ஜார்ஜ்(ஆல்பர்ட்) 1952 பிப்ரவரி 6-ம் தேதி காலமானார். அதே நாளில், தனது 26 வயதில் இங்கிலாந்து ராணியானார் இரண்டாம் எலிசபெத். 70 ஆண்டுகள் 214 நாட்கள் அவர் ராணியாக பதவி வகித்துள்ளார். இதன்மூலம் அந்நாட்டில் நீண்டகாலம் பதவியில் இருந்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

மகாராணி மறைவை அடுத்து, அவரது மூத்த மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னரானார்.

இதற்கிடையே எலிசபெத்தின் உடல், லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாடாளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் 19-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, லண்டன் மாநகர சாலைகளில் நேற்று முன்தினம் இரவு முதலே லட்சக்கணக்கானோர் குவியத் தொடங்கினர். இதுதவிர அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகளும் லண்டன் சென்றனர். இதையடுத்து, சுமார் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள், 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், ராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து ராணுவ பீரங்கி வாகனத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அப்போது, அந்நாட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இடத்தில் இருந்தபடியே 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டசுமார் 2 ஆயிரம் வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ராணுவ சீருடையில் சார்லஸ்

பின்னர், அங்கிருந்து எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி, விண்ட்சர் கேஸ்டிலுக்கு பீரங்கி வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ராணுவ சீருடையுடன் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமீலா, சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் சென்றனர். 1,650 ராணுவ வீரர்களும் அணிவகுத்துச் சென்றனர்.

மலர் தூவி மக்கள் கண்ணீர்

நாடாளுமன்ற சதுக்கம், நாடாளுமன்ற சாலை, ஒயிட் ஹால் வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர்களை தூவி ராணி எலிசபெத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 1.6 கி.மீ. தூரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே உள்ள வெலிங்டன் ஆர்ச் பகுதியில் சவப்பெட்டி இறக்கப்பட்டது. அங்கு அரண்மனை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து 32 கி.மீ. தூரம் கார் மூலம் சவப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்டது.

மறைந்த ராணியின் இறுதிச்சடங்கை முன்னிட்டு, இங்கிலாந்து அரசு நேற்று பொது விடுமுறை அறிவித்திருந்தது. இதையடுத்து, பள்ளிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் 125 திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. பொது இடங்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய டிஜிட்டல் திரைகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

பின்னர் விண்ட்சர் கேஸ்டில் பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலய வளாகத்தில் எலிசபெத்தின் கணவர் பிலிப், பெற்றோர், சகோதரி உள்ளிட்டோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தினர். இத்துடன் இங்கிலாந்தில் கடந்த 11 நாட்களாக அனுசரிக்கப்பட்டு வந்த துக்கம் முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்தின் முதல் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்தபோது 1965-ல் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக 57 ஆண்டுகள் கழித்து ராணி எலிசபெத்துக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் முர்மு அஞ்சலி

எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 17-ம் தேதி மாலை லண்டன் சென்றார். அவர் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நேற்று முன்தினம் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து, இந்தியா சார்பில் இரங்கல் தெரிவித்தார்.

நேற்று நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்றார். அப்போது, பல்வேறு உலக தலைவர்களையும் அவர் சந்தித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

8 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்