ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம்: நேரலையில் நிகழ்வுகளை ஒளிபரப்பும் அரச குடும்பம்

By செய்திப்பிரிவு

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்திய சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றுள்ளார்.

இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அனைத்தையும் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதனை உலக மக்கள் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களின் வழியே பார்த்து வருகின்றனர். அதோடு அந்த வீடியோவை ஊடகங்கள் ஸ்ட்ரீம் செய்தும் வருகின்றன.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த ராணிக்கு, இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து பீரங்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் செல்கின்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெற்று வரும் இறுதிச் சடங்கு கூட்டத்தில், உலகம் முழுவதிலும் இருந்து அழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இறுதி ஊர்வல நிகழ்வுகள் நேரலையில் காண வீடியோ லிங்க்…

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE