கீவ்: உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் பின்வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை மறுத்துள்ள ரஷ்ய பாதுகாப்பு வட்டாரங்கள், “இது போர் தந்திரம்” என்று தெரிவித்துள்ளன.
சோவியத் யூனியனில் இருந்து கடந்த 1991-ம் ஆண்டில் உக்ரைன் தனியாகப் பிரிந்தது. அதன்பிறகும் ரஷ்யாவுடன் அந்த நாடு நட்பு பாராட்டி வந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக புரட்சி வெடித்து, அவரது ஆட்சி அகற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. அங்கு பெரும்பான்மையாக வாழும் ரஷ்யர்களின் விருப்பத்தின்படியே கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்திருப்பதாக அதிபர் விளாடிமிர் புதின் விளக்கம் அளித்தார்.
கிழக்கு உக்ரைனின் டோன்ஸ்க், லுகான்ஸ்க் மாகாணங்களில் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டன.
மறைமுக 3-ம் உலகப் போர்
இந்த சூழலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இதன்காரணமாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களை வாரி வழங்கி வருகின்றன. அதோடு மேற்கத்திய நாடுகளின் முன்னாள் ராணுவ தளபதிகள், வீரர்கள் உக்ரைனில் முகாமிட்டு ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா எதிரணியாகவும் போரில் ஈடுபட்டுள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் மறைமுகமாக 3-ம் உலகப் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன.
ஆரம்ப காலம் முதலே போரில்ரஷ்யாவின் கை ஓங்கி இருக்கிறது. உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 80 சதவீத பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்த சூழலில் கடந்தஒரு வாரமாக கார்கிவ் பகுதியில் உக்ரைன் ராணுவம் முன்னேறி வருவதாகவும் ரஷ்ய ராணுவம் பின்வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்ய வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடிவிட்டதாக உக்ரைன் அரசு கூறி வருகிறது.
உண்மை என்ன?
அமெரிக்காவில் வரும் நவம்பர் 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்ற அதிபர் ஜோ பைடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆளும் கட்சிக்கு ஆதரவு பெருகும் வகையில் சர்வதேச அளவில் சில ராணுவ நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தங்கியிருந்த அல்காய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி, அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கடந்த ஜூலை 31-ம் தேதி கொல்லப்பட்டார். அதோடு உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அண்மை காலத்தில் அமெரிக்காவின் அதிநவீன பீரங்கிகள், ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. போர் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க வீரர்களும் உக்ரைனில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாகவே உக்ரைனின் கார்கிவ் பகுதியில் அந்த நாட்டு ராணுவம் சுமார் 6,000 சதுர கிலோ மீட்டர் பரப்பை ரஷ்யாவிடம் இருந்து மீட்டிருக்கிறது.
ஆனால் இந்த வெற்றியை போரின் திருப்புமுனை என்று வர்ணிப்பதில் அர்த்தமில்லை என்று சர்வதேச பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். உக்ரைன் கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பகுதி இன்னமும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அப்பாவி மக்களை கேடயங்களாக பயன்படுத்தியே உக்ரைன் ராணுவம் முன்னேறுகிறது. ரஷ்ய ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த தொடங்கினால் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்று பாதுகாப்பு துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இது போர் தந்திரம்..
ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: கார்கிவின் சில பகுதிகளில் படைகளை வாபஸ் பெற்றிருப்பது உண்மைதான். ஆனால் இது போர் தந்திரம். அடுத்த சில வாரங்களில் உக்ரைன் ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். தற்போது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளோம். எம்.ஐ.-35 ஹெலிகாப்டர், சுகோய் 35 போர் விமானங்கள் அதிக அளவில் போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
கார்கிவின் சில பகுதிகளில் உக்ரைன் வீரர்கள் முன்னேறி உள்ளனர். அவர்கள் திரும்பி செல்ல முடியாது. அவர்களை சுற்றி ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் கார்கிவ் பகுதியில் சுமார் 2,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 800 வீரர்கள் கொல்லப்பட்டனர். உக்ரைனின் ராணுவ முகாம்கள், ஆயுத கிடங்குகள், பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு ராணுவத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மின்சாரம் இன்றி 5 மாகாணங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ரஷ்யாவின் போர் தந்திரத்தை இப்போது பகிரங்கமாக வெளியிடமுடியாது. கார்கிவ் பகுதியில் இருந்து உக்ரைன் ராணுவம் துடைத்தெறியப்படும் இவ்வாறு ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரே கல்லில் 2 மாங்காய்
சர்வதேச அரங்கில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொள்ள பல்வேறு திரைமறைவு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் உக்ரைன் போரும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் டாலருக்கு நிகராக ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாக ஐரோப்பிய ஒன்றியம் உருவெடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். தற்போதைய உக்ரைன் போரால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு ரஷ்யாவும் ராணுவ, பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. உக்ரைன் போர் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அமெரிக்கா அடித்திருப்பதாக நடுநிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago