கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண் அஞ்சலி அப்பாதுரை போட்டி

By செய்திப்பிரிவு

விக்டோரியா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார்.

வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 10 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த மாகாண முதல்வராக ஜான் ஹோர்கன் (62) பதவி வகிக்கிறார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக கட்சியின் தலைமை பதவி, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண வீட்டு வசதி, சட்டத் துறை அமைச்சர் டேவிட் எபி (46) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை (32) களமிறங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

நவம்பர் 13-ம் தேதி வாக்கு பதிவு நடைமுறை தொடங்கி டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி உட்கட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கட்சியின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்படுபவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வராக பதவியேற்பார். வரும் 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக களமிறங்குவார்.

யார் இந்த அஞ்சலி?

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிடும் அஞ்சலி அப்பாதுரை தமிழகத்தின் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். அவருக்கு 6 வயது இருக்கும்போது பெற்றோர் கனடாவில் குடியேறினர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் குக்குவிட்லாம் நகரில் அவரது குடும்பம் வசிக்கிறது. சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கிய அஞ்சலி அரசின் கல்வி உதவித் தொகை பெற்று அமெரிக்காவின் மெய்னி மாகாணம், பார் ஹார்பர் நகரில் செயல்படும் காலேஜ் ஆப் அட்லான்டிக் கல்லூரியில் சர்வதேச அரசியல், பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றார். சுற்றுச்சூழலில் அதிக ஆர்வம் கொண்ட அவர், ஐ.நா. சபை உட்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

அஞ்சலி அப்பாதுரை கூறியிருப்பதாவது: நான் கனடாவில் குடியேறியவள். இந்த மண்ணை நேசிக்கிறேன். இது எனது தாய் வீடு. மனிதர்கள் எல்லோரும் சரிசமம் என்று கருதுகிறேன். மக்களுக்கு சேவையாற்றுவதை கடமையாக கருதுகிறேன். மனித உரிமைகள், சுற்றுச்சூழலை காக்க போராடி வருகிறேன். ஐ.நா. சபை உட்பட பல்வேறு சபைகளில் சுற்றுச்சூழலுக்காக குரல் எழுப்பி இருக்கிறேன்.

பருவநிலை மாறுபாட்டை தடுப்பது தொடர்பாக ஆட்சியாளர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை. கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பருவநிலை மாறுபாடு காரணமாக அடுத்தடுத்து பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டனர். வயல்கள் தண்ணீரில் மூழ்கின. பெரும் இழப்பு ஏற்பட்டது.

அடுத்ததாக வெப்ப அலை காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனினும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இதுவரை போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் கனடாவின் சுற்றுச்சூழலை சீர்கெடுக்கின்றன. அந்த நிறுவனங்களால் நதிகள் பாழாகின்றன. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் பருவநிலை மாறுபாட்டை தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். இதன்காரணமாகவே பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். எங்கள் கட்சியில் உறுப்பினராகி எனக்காக வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல், அரசியல் மட்டுமன்றி இசை, சல்சா நடனத்திலும் அஞ்சலி அப்பாதுரைக்கு ஆர்வம் அதிகம். அவர் பல்வேறு இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்