ஆப்கனில் பஞ்சம் காரணமாக 60 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு - ஐ.நா. உயர் அதிகாரி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நியூயார்க்: தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் கடந்த ஆண்டு வெளியேறின. இதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றினர். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுக்கு மாணவிகள் செல்லக்கூடாது என்றும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்ட்டின் கிரிப்பித்ஸ் ஆப்கன் குறித்து கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடு, மனிதாபிமானம், பொருளாதாரம், காலநிலை, பட்டினி, நிதி போன்ற பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் நடந்த மோதல்கள், வறுமை, காலநிலை அதிர்ச்சி, உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவை நீண்ட காலமாக நீடித்து இருக்கும் ஒரு சோகமான உண்மை.

ஆனால் ஒரு ஆண்டுக்கு முன்பு தலிபான்கள் நாட்டை கையகப்படுத்தியதில் இருந்து பெரிய அளவிலான வளர்ச்சி உதவிகள் நிறுத்தப்பட்டதே தற்போதைய மோசமான நிலைக்குக் காரணம். எனவே, அந்நாட்டுக்கு உடனடியாக நிதி உதவியை ஐ.நா. சபை வழங்க வேண்டும். இவ்வாறு துணைப் பொதுச் செயலாளர் மார்ட்டின் கிரிப்பித்ஸ் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE