ஆப்கனில் ஓர் ஆண்டுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்குகள்

By செய்திப்பிரிவு

காபூல்: ஆப்கனிஸ்தானில் ஓர் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளன. இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சியிலிருக்கும் தலிபான்களிடமிருந்துதான் வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்தனர். குறிப்பாக, பெண்கள் பர்தா அணிய வேண்டும், பணிக்கு வரக் கூடாது போன்ற தீவிர கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்தனர். தாங்கள் பழைய பாணியில் ஆட்சி செய்ய மாட்டோம் என தலிபான்கள் கூறினாலும், பெண்கள் மீதான அவர்களது ஆதிக்க நிலை தொடர்ந்து வருகிறது.

மேலும், பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் மீதும், அதன் கலைஞர்கள் மீதும் தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இவ்வாறான சூழலில் ஆப்கனில் திரையரங்குகளை திறக்கும் முடிவை தலிபான் அரசு எடுத்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆப்கன் திரையரங்குகளில் 37 ஆவணப் படங்கள் வெளியாக உள்ளன. இதில் ஒரே ஒரு படத்தில் மட்டும் அதிஃபா முகமத் என்ற பெண் ஒருவர் நடித்துள்ளார். மற்ற படங்களில் அனைத்தும் ஆண்களே நடித்துள்ளனர்.

இது குறித்து காபூலில் உள்ள செக்ரா என்ற பெண் கூறும்போது, “பெண்கள் இம்மாதிரியான துறைகளில் பணி செய்ய தடுக்கக் கூடாது. இது பெண்களின் உரிமை. பெண்கள் இல்லாத படம் நல்ல படமாகும் இருக்கும் என்று நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், ஆண் நடிகர்கள் பலரும் மீண்டும் ஆப்கானிஸ்தானில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE