30,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் மயங்கிய விமானி; பெரும் முயற்சிக்குப் பின் தரையிறக்கம்

By செய்திப்பிரிவு

பர்மிங்காம்: தரைமட்டத்திலிருந்து சுமார் 30,000 அடி உயரத்தில் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது, விமானி மயக்கமடைந்ததால் பெரும் போராட்டத்திற்குப் பிறகு விமானம் தரையிறக்கப்பட்டது.

ஜெட் விமானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் பர்மிங்காம் விமான நிலையத்திலிருந்து துருக்கிக்கு பயணித்துள்ளது. ஆனால், எதிர்பாராத விதமாக விமானத்தை கிரீஸில் தரையிறக்கும் நிலை ஏற்பட்டது. இந்தத் தகவல் பின்னர்தான் வெளியிடப்பட்டது.

விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது விமானி திடீரென மயக்க நிலைக்கு உள்ளாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து துணை விமானி விமானத்தை கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, கிரீஸில் உள்ள தெசலோனிகி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயக்கத்துக்கு உள்ளான விமானிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது, “விமானத்தில் முன்பகுதியில் எதோ சலப்சலப்பு ஏற்படுவதை நாங்கள் உணர்ந்தோம். விமானத்தில் எதோ தவறு நடக்கிறது என்பதை எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது. யாரோ கழிவறையில் தன்னையே தாக்கிக் கொள்வதாக நினைத்தோம். பின்னர்தான் விமானம் கிரீஸில் தரையிறக்கப்படுவது குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என்றார். பின்னர் ஜெட் விமானம் சில மணி நேர தாமத்திற்குப் பிறகு துருக்கி சென்றடைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE