எத்தியோப்பியா: 37,000 அடி உயரத்தில் விமானிகள் தூங்கியதால் தரையிரங்க தாமதமான விமானம்

By செய்திப்பிரிவு

அடிஸ் அபாபா: எத்தியோப்பியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரு விமானிகள் பயணத்தின்போது தூங்கிவிட்டதால் விமானம் தாமதமாக வந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

சூடானின் கார்ட்டூம் பகுதியிலிருந்து எத்தியோபியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவுக்கு போயிங் 737 விமானம் சென்று கொண்டிருந்துள்ளது. இந்த விமானத்தை ஏத்தியோபியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரண்டு விமானிகள் ஓட்டியுள்ளனர். பயணத்தின்போது எதிர்பாராத விதமாக விமானிகள், விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் வைத்து தூங்கியதால் இலக்கை அடைந்தும் அந்த விமானம் தரையிறங்காமல் மேலே பறந்து கொண்டிருந்தது.

விமானம் தரையிறங்குவதற்கான சிக்னல்கள் கொடுக்கப்பட்டு விமானம் தரையிறங்குவதற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. விமானிகளை தொடர்பு கொண்டால் அதிகாரிகளுக்கும் அவர்களிடமிருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இந்த நிலையில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒருகட்டத்தில் எச்சரிக்கை ஒலி அடிக்க விமானிகள் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளனர். பின்னர் திறமையாக செயல்பட்டு விமானத்தை 25 நிமிடங்கள் தாமதமாக தரையிறக்கி உள்ளார்கள். இதன் மூலம் அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

கடந்த மாதம் மே மாதம், 38,000 அடி உயரத்தில் நியூயார்க்கிலிருந்து - ரோம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் விமானிகள் தூங்கியதால் தரையிரங்குவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE