சர்வதேச தட்டுப்பாட்டை சமாளிக்க உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

கீவ்: கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக கடந்த 5 மாதங்களாக உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக சர்வதேச அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபை சார்பில் ரஷ்யா, உக்ரைன் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஜூலை இறுதியில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி உக்ரைனின் உணவு தானிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்யா உறுதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல் உக்ரைனின் பல்வேறு துறைமுகங்களில் இருந்து கோதுமை, சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. இதுவரை 18-க்கும் மேற்பட்ட உணவு தானிய சரக்கு கப்பல்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளன.

கடந்த 12-ம் தேதி உக்ரைனின் சோர்னோமார்ஸ்க் துறைமுகத்தில் இருந்து 3,050 டன் கோதுமையுடன் புறப்பட்ட சரக்கு கப்பல் துருக்கியின் இஸ்தான்புல் நகரை நேற்று முன்தினம் சென்றடைந்தது. மற்றொரு கப்பல் 26,000 டன் சோளத்துடன் லெபனான் புறப்பட்டது. கடைசி நேரத்தில் லெப னான் நிறுவனம், சோளத்தை வாங்க மறுத்துவிட்டதால் அந்த சரக்கு கப்பல் துருக்கியில் நிறுத்தப்பட்டது.

தற்போது சிரியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சோளத்தை வாங்க முன்வந்ததால் அந்த நாட்டுக்கு உக்ரைன் சரக்கு கப்பல் சென்றுள்ளது. இதேபோல உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல்கள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சென்றடைந்துள்ளன. இதன் காரணமாக சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் கடுமையானஉணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு ஐ.நா. சபை சார்பில்உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து புறப்பட்ட ‘பிரேவ் கமாண்டர்' என்ற சரக்கு கப்பல் 23,000 மெட்ரிக் டன் கோதுமையுடன் டிஜிபோத்திக்கு சென்றடைந்து உள்ளது. அங்கி ருந்து எத்தியோப்பியா, சோமாலியா, கென்யாவுக்கு கோதுமை கொண்டு செல்லப்படும் என்று ஐ.நா. சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE