இந்தியா @ 75: உலக நாடுகளின் பார்வையில் இந்தியா

By செய்திப்பிரிவு

மதச்சார்ப்பின்னமை: உலக நாடுகளின் பார்வையில் இந்தியா ஒரு தனி கண்டமாகவே பார்க்கப்படுகிறது. காரணம், அதன் பன்முகத்தன்மை. பரப்பளவில் மட்டுமல்ல மொழி, இனம் என பல்வேறு தரப்பட்ட மக்களை ஒன்றிணைந்த நாடாக இந்தியா உள்ளது.

மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் உலக நாடுகளில் தனிமனிதன் மீதான வெறுப்புணர்வும், அதையொட்டிய மோசமான சம்பவங்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்ட விளைவே போர்களும், உள் நாட்டு போர்களும். இவ்வாறான சூழலில் இந்தியா தனக்குரிய மதசார்பின்மை அடையாளத்துடன் வெறுப்பை பரப்புவர்களுக்கு மத்தியிலும் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு உலக நாடுகளின் பார்வையில் மதசார்ப்பின்மை அடையாளத்தை இந்தியா கடந்த 75 ஆண்டுகளாக தக்கவைத்துள்ளது.

மிகப் பெரிய ஜனநாயக நாடு : 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்போது இந்தியாவிடம் சொந்த ஆட்சி அதிகாரம், அரசியலமைப்பு இல்லை. அதற்காக 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வரை நாம் காத்திருந்தோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் 1951-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்கி, 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. முதல் மக்களவைத் தேர்தலை இந்தியா சந்தித்தபோது, பிரிவினையின் காரணமாக பல சவால்களை இந்தியா சந்திக்க வேண்டி இருக்கிறது.

முதல் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நேருவே, தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமரானார். அதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டுவரை இந்தியா 17 மக்களவைத் தேர்தல்களை ஜனநாயக முறையில் நடத்தி முடித்துள்ளது மிகப் பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு: எம். எஸ் சுவாமி நாதன் தலைமையில் இந்தியாவில் 1970-க்குப் பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் உறுதுணையுடன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்ணடுள்ளது. உலகின் அடிப்படை உணவுப் பொருட்களாக உள்ள அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போரின் போது உலகளவில் ஏற்பட்ட கோதுமை தட்டுப்பாட்டை இந்தியா ஈடு செய்தது. இவ்வாறு நம் நாடு உணவு உற்பத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக உலக நாடுகளின் பார்வையில் காணப்படுகிறது.

இருப்பினும் கடந்த ஆண்டு, உலகளாவிய பசி அட்டவணையில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் இருந்தது, அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைவிட இந்தியா பின் தங்கி இருந்தது வருத்தமான ஒன்றுதான். எனினும் அதனை சரி செய்வதற்கான ஆக்கபூர்வமான பணியில் இந்தியா தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பது ஆரோக்கியமான பார்வையே.

பிராண்ட்டு ஃபினாஸ் நிறுவனம் உலகின் மதிப்புமிக்க நாடுகளின் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.

உலக நாடுகளின் தோழனாக இந்தியா: கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை உலக நாடுகள் எவ்வாறு சந்தித்து வருகின்றதோ, அவ்வாறே இந்தியாவும் எதிர்கொண்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. பெரும் நெருக்கடியில் இருந்த இலங்கைக்கு தக்க நேரத்தில் கடனளித்து உதவியது இந்தியா. அதுமட்டுமல்லாது ஆப்கன் உணவு நெருக்கடிக்கும் இந்தியா உதவியது. தலிபான்கள் ஆட்சியிலும் இது தொடர்ந்தது கவனிக்கத்தக்கது. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தொடர்ந்து நட்பு சார் உதவிகளை இந்தியா செய்து வருகிறது.

மருத்துவத்தில் முன்னுதாரணம்: போலியோ இன்னமும் உலகம் முழுவதும் ஒழிக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் இந்தியா போலியோவை முற்றிலுமாக ஒழித்து சாதனை புரிந்தது. போலியோ மட்டுமல்லாது பெரியம்மையும் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மருத்துவத் துறை சாதனைக்கு மற்றொரு உதாரணம், கரோனா தடுப்பூசியை பொதுமக்களிடம் கொண்டு சென்றவிதம். இந்தியா கரோனா தடுப்பூசியை பரவலாக எடுத்துச் சென்றதில் அடைந்த வெற்றியும், தொற்றுக் கண்காணிப்பில் அதன் தொழில்நுட்பப் பயன்பாடும் உலக நாடுகளுக்கு பல பாடங்களைக் கொண்டுள்ளது என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாரட்டியதை நினைவுக்கூரலாம்.

இறுதியாக, உலக அரங்கில் 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளையும், சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு தலைமையிலும் இந்தியா பிரமாண்டமாக நடத்தி முடித்ததை வெளி நாடுகளிலிருந்து வந்திருந்த வீரர்கள் பாராட்டியத்திலிருந்து நாம் விளக்கி கொள்ளலாம்.

இவ்வாறு உலக நாடுகளால் உற்று நோக்கும் நாடாக இந்தியா பரிணாமம் அடைந்திருக்கிறது. எனினும் வல்லரசு நாடாக இந்தியா மாறுவதற்கான பாதை நீண்ட தூரத்தில் உள்ளது. அப்பாதையில் இந்தியாவை அழைத்து ஒட்டுமொத்த மக்களாக நாம் ஒன்றிணைவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE