நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது: ரஷ்யா

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: நான்சி பெலோசியின் தைவான் பயணத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற சபா நாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு நேற்றிரவு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையைப் நான்சி பெலோசி பெற்றார். மேலும் செய்தியாளர் சந்திப்பில், “தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. தைவான் உடன் நாங்கள் நிற்கிறோம்” என்று நான்சி தெரிவித்திருக்கிறார்.

நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடுகிறது என்றும் சீனா தெரிவித்தது.

நான்சியின் வருகை காரணமாக நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தைவானைச் சுற்றி நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உட்பட முக்கிய ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா அறிவித்திருக்கிறது. இதனால், தைவான் தீவைச் சுற்றி பதற்ற நிலை நிலவுகிறது.

நான்சியின் பயணம் குறித்து ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறத் துறை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, “நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. இது சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டும் நடவடிக்கை” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE