சீனாவிடம் திபெத், தைவான் வசமாக நேருவும் வாஜ்பாயுமே காரணம்: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திபெத்தும், தைவானும் சீனாவின் பகுதி என்பதை இந்தியர்கள் இயல்பான உண்மையாக ஒப்புக்கொள்ளக் காரணம் நேருவும், வாஜ்பாயும் செய்த பிழைகளே என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.

இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியர்களாகிய நாம் திபெத்தும், தைவானும் சீனாவின் பகுதி என்று இயல்பாக ஒப்புக் கொண்டுள்ளோம். இதற்கு நேரு, வாஜ்பாயியின் முட்டாள்தனமே காரணம். ஆனால் சீனா இப்போதெல்லாம் எல்லைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தைக் கூட மதிப்பதில்லை. இரு நாடுகளும் இணைந்து போட்டுக் கொண்ட ஒப்பந்ததத்தை மீறி லடாக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. ஆனால் மோடியோ 'யாரும் படையெடுக்கவில்லையே' என்று மயக்கத்தில் கூறுகிறார். சீனாவுக்கு நம் நாட்டில் தேர்தல்கள் வரும்போது முடிவுகள் மாறும் என்பது நன்றாகவே தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் கடுமையான விமர்சன ட்வீட், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி, சீனா எதிர்ப்பையும் மீறி தைவான் சென்றுள்ள நிலையில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

பெலோசி வருகையும் ராணுவ ஒத்திகையையும்: சீனாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் மண்ணை தொட்டுள்ளார். நான்சி கடந்த ஏப்ரல் மாதமே தைவானுக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் வந்தடைந்த அவருக்கு அந்நாட்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

முன்னதாக, நான்சி தைவான் செல்வார் எனச் சொல்லப்பட்டபோதே சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்புகளை மீறி, தைவான் செல்வதில் நான்சி உறுதியாக இருக்க, அது முதலே சீனா - அமெரிக்க - தைவான் குறித்து பரபரப்பு நிலவின. நான்சி பெலோசி தைவான் எல்லையை நெருங்க, சீனா போர் வாகனங்களை தைவான் எல்லை நோக்கி நகர்த்தியது. இப்போது சீனா ராணுவ ஒத்திகைகளையும் நடத்தி வருகிறது.

கடந்த 1950-ல் அப்போதைய சீன அதிபர் மா சே துங்கின் படைகள், திபெத்தை ஆக்கிரமித்தன. அப்போதுமுதல் இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சினை வெடித்தது. கடந்த 1959-ல் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தனது ஆதரவாளர்களுடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரோடு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்களும் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் குடியேறினர். எல்லைப் பிரச்சினையால் கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மிகப்பெரிய போர் ஏற்பட்டது.

இதுதவிர டோக்லாம், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் என இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை இன்றளவும் நீறு பூத்த நெருப்பாக தகித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், திபெத் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. நான்சி வருகையை ரஷ்யா, வட கொரியா எதிர்த்துள்ளது. ஜப்பான் அரசு மையமாக எல்லாவற்றையும் உற்று கவனிக்கும் நாடாக உள்ளது. இந்நிலையில், திபெத் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு நேரு, வாஜ்பாயை குறை கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE