“தைவானுக்கு அமெரிக்க ஆதரவு உண்டு” - நான்சி பெலோசி உறுதி | சீனாவின் கோபமும் எதிர்வினைகளும்

By செய்திப்பிரிவு

தைபே: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது வரலாற்று சிறப்புமிக்க தைவான் பயணத்தில், ‘தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளது.’ என தெரிவித்திருந்தார். நான்சியின் இந்தப் பேச்சு சீனாவைக் கடும் கோபமடையச் செய்துள்ளது.

நான்சியின் வருகை காரணமாக நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தைவானைச் சுற்றி நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உட்பட முக்கிய ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா அறிவித்திருக்கிறது. இதனால், தைவான் தீவை சுற்றி பதற்ற நிலை நிலவுகிறது. சீனாவிற்கு பதிலடியாக தைவான் படைகளும் சீனாவை ஒட்டிய மேற்குத் தீவுகள் பகுதியில் நிலை நிறுத்தியுள்ளன.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி கடந்த ஏப்ரல் மாதமே தைவானுக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் வந்தடைந்த அவருக்கு தைவான் அதிகாரிகள் நேற்றிரவு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையைப் நான்சி பெலோசி பெற்றார். இப்பயணம் குறித்து செய்தியாளர்களிடம் நான்சி பேசும்போது, “தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. தைவான் உடன் நாங்கள் நிற்கிறோம். தைவானுக்கு பாதகமாக எதுவும் நடக்க நாங்கள் விரும்பவில்லை. தைவான் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். இதிலிருந்து தைவான் பின்வாங்கக் கூடாது” என்றார்.

நான்சியை தொடர்ந்து தைவான் அதிபர் சாய் இங்-வென் பேசும்போது, “தைவான் முழுவதும் பாதுகாப்பை நிலை நாட்ட நாங்கள் உறுதி கொண்டுள்ளோம் என பெலோசியிடம் கூறினேன். தைவானைச் சுற்றி சீனா நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் தேவையற்ற எதிர்வினைகள்.

பல ஆண்டுகளாக தைவானுக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் பலரை நாங்கள் வரவேற்றுள்ளோம். நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது நமது விருந்தோம்பல் கலாசாரத்தில் இயல்பாகவே உள்ளது” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

வடகொரியா: “சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையீடுகிறது. நான்சி பெலோசியின் இப்பயணம் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கும்” என வடகொரியா விமர்சித்துள்ளது.

தென் கொரியா: “நான்சியின் வருகை காரணமாக பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அமெரிக்கா - சீனா பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும்” என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஜப்பான்: “தைவானை சுற்றி சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன” என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

சீனாவின் பதற்றத்துக்கு காரணம் என்ன? - சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

தைவானின் சுதந்திர நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது சீனாவுக்கு அதிருப்தியை அளித்தது. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி தைவானுக்கு நேரடி பயணம் சென்றிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE