நான்சி பெலோசியின் தைவான் வருகை | உலகமே உற்றுநோக்கிய விமானம் - திக்.. திக்.. 'தைபே' நொடிகள்

By செய்திப்பிரிவு

தைபே: சீனாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் மண்ணை தொட்டுள்ளார்.

நான்சி கடந்த ஏப்ரல் மாதமே தைவானுக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் வந்தடைந்த அவருக்கு அந்நாட்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக, நான்சி தைவான் செல்வார் எனச் சொல்லப்பட்டபோதே சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்புகளை மீறி, தைவான் செல்வதில் நான்சி உறுதியாக இருக்க, அது முதலே சீனா - அமெரிக்க - தைவான் குறித்து பரபரப்பு நிலவின.

உலகமே உற்றுநோக்கிய விமானம்

மலேசியாவில் தங்கியிருந்த நான்சி பெலோசி அங்கிருந்து அமெரிக்க விமானப்படையின் SPAR19 விமானம் மூலம் தைவானின் தலைநகர் தைபே நகரத்துக்கு பறந்தார். இந்த விமானத்தின் ஒவ்வொரு நகர்வையும் லட்சக்கணக்கான நபர்கள் கண்காணித்தனர். FlightRadar24 என்ற விமான கண்காணிப்பு வலைதளம் விமானங்களை பின்தொடர்பவர்களை கண்காணிப்பது வழக்கம். இந்த வலைதளம் மூலமாக சுமார் 3 லட்சம் பேர் SPAR19 விமானத்தின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக நேற்று கவனித்தனர். இதனால், உலகமே உற்றுநோக்கிய விமானமாக இது மாறியது. நேற்று மாலை சுமார் 3.40 மணியளவில் கோலாலம்பூரின் சுபாங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட SPAR19 விமானம் இரவு 8:20 மணி அளவில் தைபேயில் உள்ள சாங்ஷான் விமான நிலையத்தை வந்தடைந்தது.

நான்சி பெலோசி தைவான் எல்லையை நெருங்க, சீனா போர் வாகனங்களை தைவான் எல்லை நோக்கி நகர்த்தியது. பதிலுக்கு தைவான் படைகள் போருக்குத் தயார் நிலையில் இருக்கும் வகையில் சீனாவை ஒட்டிய மேற்குத் தீவுகள் பகுதியில் நிலை நிறுத்தத் தொடங்கின. அதேநேரம், ஜப்பான் ராணுவ தளங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 13 அமெரிக்க விமானப்படை விமானங்கள் நான்சி பெலோசி பாதுகாப்பிற்காக தைபே நகரம் நோக்கி பறந்தன.

இரவு சுமார் 7.30 மணியளவில் நான்சி பெலோசி பயணித்த விமானம் தைவான் வான் எல்லைக்குள் வந்தது. அப்போது தைவான் விமானப்படை போர் விமானங்கள் பெலோசியின் SPAR19 விமானம் விமானத்தை சுற்றி பாதுகாப்பு கொடுத்து பத்திரமாக தைபே விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றன. 8.10 மணியளவில் தைபே சாங்ஷான் விமான நிலையத்தில் இறங்கினார் நான்சி பெலோசி. மலேசியாவில் இருந்து தைபே நகரம் வரும் வரையிலான நான்சி பெலோசியின் பயண நிமிடங்கள் பதற்றங்கள் மிகுந்ததாகவே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டன.

பெலோசி தைபே வந்தபிறகும் பதற்றங்கள் நிறைந்ததாகவே இருந்தன. பெலோசி வந்திறங்கிய நேரத்தில் தைவான் வான் எல்லைக்குள் 21 சீன இராணுவ விமானங்கள் பறந்தன. மறுபுறம், நாளை மறுநாள் (வியாழன்) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தைவானைச் சுற்றியுள்ள ஆறு பிராந்தியங்களில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உட்பட 'முக்கியமான' இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா அறிவிப்பு வெளியிட்டது. இதனால் தொடர் பதற்றம் சீனா - அமெரிக்கா - தைவானை சுற்றி நிலவி வருகின்றன.

எனினும் பதற்றங்களை தாண்டி, தைவானில் தரையிறங்கியதை அடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பெலோசி.

பின்னணி: சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE