“வெப்ப அலை எதிரொலி... இனி ‘டை’ அணியாதீர்கள்” - ஸ்பெயின் பிரதமர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

மாட்ரிட்: அதிதீவிர வெப்பத்தின் பாதிப்பிலிருந்து தப்பிக்க ‘டை’ அணிவதை தவிர்க்குமாறு தன் நாட்டு மக்களுக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் ஜூலை தொடக்கம் முதலே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில், வெப்ப அலைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், தனது நாட்டு குடிமக்களுக்கு ஆலோசனை ஒன்றை வழங்கி இருக்கிறார் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, “டை அணிவதை நாம் தவிர்த்தால், மிகக் குறைவான ஏசி குளிரில் கூட நாம் சிரமமின்றி பணியாற்றலாம். இவ்வாறு செய்தால் எரிசக்தியும் மிச்சமாகும். நான் டை அணிவதில்லை. என்னைப் போலவே அமைச்சர்களும், அதிகாரிகளும் டை அணிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், ஸ்பெயினில் ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் ஏசி பயன்பாட்டிற்கு நிறைய கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக வெப்ப நிலையை சமாளிப்பதற்கு இம்மாதிரியான ஆலோசனை வழங்குவது இது முதல் முறை அல்ல. 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள குளிர்ச்சியை தரும் ஆடைகளை அணியுமாறு ஜப்பான் அரசு அறிவுறுத்தியது.

எரிவாயுவுக்காக ரஷ்யாவை நம்பியிருக்கும் நிலையை மாற்ற ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கவும், எரிசக்தி பயன்பாட்டை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இறங்கி உள்ளன.

காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் தொடர்ந்து கடும் தீவிர இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன. எனவே, இவற்றை உணர்ந்து பூமி வெப்பமாதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை உலகத் தலைவர்கள் உடனடியாக எடுக்குமாறு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE