நான்சி பெலோசியின் தைவான் பயணமும், சீனாவின் எதிர்ப்பும்

By செய்திப்பிரிவு

அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவானுக்கு செல்வது எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது போன்றது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை திங்கட்கிழமை தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நான்சியின் பயணத்தை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது. நான்சி தைவானுக்கு சென்றால் எங்களது உள் விவகாரங்களிலும் தலையிடுவது போன்றது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நான்சி பெலோசி மலேசியாவில் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு நான்சி வரவுள்ளதாக அமெரிக்கா, தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவுப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

நான்சி வருகை குறித்து வரும் செய்திகளுக்கு தைவான் பிரதமர் சு செங்-சாங் பதிலளிக்கும்போது, ”எந்தவொரு வெளிநாட்டு விருந்தினரையும் எங்கள் நாடு அன்புடன் வரவேற்கும். அவர் வருகை தந்தால் அதற்கான ஏற்பாடுகளை தைவான் சிறப்பான முறையில் செய்யும்” என்றார்.

நான்சி கடந்த ஏப்ரல் மாதமே தைவானுக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தைவான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தைவானுக்கு நம்முடைய ஆதரவை காட்டுவது அவசியம் என்று நான்சி முன்னரே பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே அவரது ஆசிய பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பின்னணி: சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE