“வெட்கித் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்கிறேன்” - கனடாவில் போப் பிரான்சிஸ் கோரிய மன்னிப்பும் பின்புலமும்

By செய்திப்பிரிவு

ஒட்டாவா: கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

போப் பிரான்சிஸ் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், இப்பயணம் போப்பின் வழக்கமான பயணமாக அமையாமல், கனடாவின் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய குற்றத்திற்கும்,பாலியல் துன்புறுத்தலுக்கும் போப் பிரான்சிஸ் என்ன பதில் அளிக்கப் போகிறார் என உலக நாடுகள் வியந்து நோக்கி கொண்டிருந்தன.

இந்தச் சூழலில், கனாடாவின் மாஸ்வாசிஸ் நகரில், திங்கட்கிழமை கனடாவின் பழங்குடி மக்கள் சூழ்ந்திருக்க நடந்த நிகழ்வில் போப் பிரான்சிஸ் பேசியது: “மிகுந்த வருத்தத்துடன் இந்த மன்னிப்பைக் கேட்கிறேன். கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இங்கிருந்த பழங்குடிகளின் மொழி மற்றும் கலாசாரம் அழிய காரணமாகியுள்ளன. பழங்குடியின மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்த கொடூரத் தீமைகளுக்கு வெட்கித் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மன்னிப்பு பழங்குடிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளைக் கண்டறிவதற்கான விசாரணையை தீவிரப்படுத்தவும், கடந்த காலங்களில் வலிகளை அனுபவித்த பழங்குடி மக்களுக்கு சிறு மருத்தாகவும் உதவும்” என போப் பிரான்சிஸ் பேசினார்.

போப் பிரான்சிஸின் மன்னிப்பைக் கேட்டு அங்கிருந்த பழங்குடி மக்களும், கத்தோலிக்க பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் கண்ணீர் விட்டனர். இதனால் அந்த நிகழ்வே உணர்வுபூர்வமாகியது.

கத்தோலிக்க பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான ஈவ்லின் கோர்க்மாஸ் பேசும்போது, “நான் இந்த மன்னிப்புக்காக 50 வருடங்கள் காத்திருந்தேன். இறுதியாக அந்த மன்னிப்புக் கோரலை கேட்டுவிட்டேன்.

துரதிருஷ்டவசமாக எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் எனது சமூகத்தைச் சேர்ந்த பலரும் இந்த மன்னிப்புக் கோரலைக் கேட்க முடியவில்லை. அந்த கத்தோலிக்க பள்ளிகளில் நடத்தப்பட்ட கொடுமைகளால் அவர்கள் தற்கொலை, குடிப்பழக்கம் , போதைப் பழக்கம் மூலம் தங்கள் வாழ்வை அழிந்து கொண்டார்கள். அவர்களால் அந்த வேதனையுடன் வாழ முடியவில்லை” என்றார்.

போப்பின் மன்னிப்பிற்கான காரணம் என்ன? - கனடாவில் கத்தோலிக்க தேவாலயத்தால் இயங்கிய பள்ளிகளில், கனடாவில் பூர்வ பழங்குடிகளாக இருந்த மெடிஸ், இனுய்ட் போன்ற பழங்குடி மக்களின் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர்.

சுமார் 1,50,000-க்கும் அதிகமான பழங்குடிகளின் பிள்ளைகள் 1870-ஆம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு பழங்குடி மாணவர்கள் கலாசார ரீதியாக துன்புறுத்தப்பட்டதோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது பிற்காலங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது. இது வாடிகனை நோக்கி பல கேள்விகளை எழுப்பவும் காரணமாகியது.

இந்தச் சூழலில் இந்தத் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று போப் பிரான்ஸிஸ் ஞாயிற்றுக்கிழமை கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தின் முக்கிய நோக்கமான தனது மன்னிப்பை ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் முன் போப் பதிவுச் செய்திருப்பது வரலாற்று நிகழ்வாக அமைந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்