மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

By செய்திப்பிரிவு

ராஜினாமா கடிதம் கூட கொடுக்காமல் நாட்டிலிருந்து தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் எதிர்ப்பு வலுப்பதால் அங்கிருந்து இன்று சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அறிவித்தபடி கோத்தபய தனது ராஜினாமா கடிதத்தை நேற்று அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா கடிதம் எதையும் வழங்காமல் ரகசியமாக நேற்று மாலத்தீவுக்கு தப்பியோடினார். அவர், மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு தப்பிச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று அதிகாலை மாலே நகரை அவர் அடைந்தார். அங்கு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

மாலத்தீவில் போராட்டம்: இந்நிலையில், மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபயவை வெளியேற்றக்கோரிஅந்நாட்டு அதிபர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. கோத்தபயவுக்கு அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது. குறிப்பாக, மாலத்தீவு அதிபர் இப்ராஹிமின் மாளிகை அருகே மாலத்தீவு மக்களும், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூர் பயணம்: மாலத்தீவில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்ச, சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலத்தீவு அரசு தனக்கு ஒரு தனி ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று கோத்தபய கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடுமையான விமர்சனம்: இதற்கிடையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, இலங்கையின் தற்போதைய நிலைக்கு விக்கிரமசிங்கேவும், ராஜபக்சவும் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். மக்களின் போராட்டங்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் உரை: ஆனால் ரணில் விக்கிரமசிங்கே மக்களுக்காக உரையாற்றுகையில் "நாட்டை துண்டாட பாசிஸ சக்திகள் முயற்சி செய்கின்றன. நெருக்கடிகளுக்கு அரசியல் சாசனத்தின்படியே தீர்வு காண முடியும். நமது சட்ட திட்டங்களை கிழித்தெறிந்துவிட்டு எந்த முடிவும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும். அதிபர் மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

நேற்று மாலை கொழும்புவில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்றும், நாடாளுமன்ற சபாநாயகர் இடைக்கால அதிபராக செயல்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அதன் பின்னரே ரணில் இதனைத் தெரிவித்தார். நாட்டின் முப்படை தளபதிகளும் மக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். நாட்டில் இயல்பு நிலையைக் கொண்டுவர ஒத்துழைக்க வேண்டும் என்றனர். காவல்துறை தலைவரும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE