இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

By செய்திப்பிரிவு

கொழும்பு: கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில், இலங்கையில் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, கோத்தபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கோத்தபய ராஜபக்ச அளிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மேலும், கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் துரிதப்படுத்தின.

நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 20-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை வழங்காமல் ரகசியமாக மாலத்தீவுக்கு சென்றடைந்தார். இதனால் இலங்கையில் பதற்றம் நிலவுகிறது.

இடையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில், “அதிபர் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மறுப்பு: இதனிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டை இந்திய தூதரகம் மறுத்துள்ளது. | வாசிக்க > கோத்தபய மாலத்தீவு தப்பிச் செல்ல உதவியா?- இந்தியா திட்டவட்ட மறுப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE