இலங்கை போராட்டம் | ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்துநொறுக்கியத்துடன் வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர். இதனால் தொடர் பதற்றம் நிலவிவருகிறது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரும் போராட்டம் அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. இன்று கொழும்பு நகரில் உள்ள அதிபர் இல்லத்தை நோக்கி வந்த மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்படுவதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்ந்து மக்களின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இதனால் அதிபர் மாளிகையை தொடர்ந்து பிரதமர் ரணில் தனிப்பட்ட இல்லத்தை அவர்கள் முற்றுகையிட தொடங்கினர். போராட்டக்காரர்கள் பிரதமருக்கு சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து வீட்டிக்கு தீ வைத்தனர். இதை பிரதமர் அலுவலகமே அதிகாரபூர்வ தகவல்களாக வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் முற்றுகைக்கு முன்பாகவே ரணில் அந்த வீட்டில் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, போராட்டத்தின் எதிரொலியாக, அனைத்துக் கட்சி அரசு அமைவதற்காக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்துக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அரசு உறுதியாக தொடர்வதற்காக ‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ என்ற முறையில் புதிய அரசுக்கு வழி வகுக்கும் இன்றைய கட்சித் தலைவர்களின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்கு இணக்கமாக எனது பிரதமர் பதவியை நான் ராஜினாமா செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE