ஜப்பானின் நீண்ட கால பிரதமராக அறியப்படும் ஷின்சோ அபே (67) இன்று காலை நாரா நகரில் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை அனைத்து உலகத் தலைவர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நட்பு நாடுகளுடனான வெளியுறவு கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக கையாளுதல் போன்றவற்றுக்கு எடுத்துக்காட்டாகவே ஷின்சோவின் செயல்பாடுகள் அறியப்பட்டன. இதன் பொருட்டே பொருளாதாரம் சார்ந்த அவரது கொள்கைகள் பிரபலாக "Abenomics" என்று அழைக்கப்படுகின்றன. அவரது ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத் துறை சார்ந்து பெரிதும் பாராட்டப்பட்டார்.
இதில், பொது விவகாரத் துறையில் ஷின்சோ அபே ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை இந்தியா வழங்கியது நினைவுக்கூரத்தக்கது.
ஜப்பானின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத மோசமான நிகழ்வாக ஷின்சோ அபேவின் மரணம் நடந்தேறியுள்ளது. இந்த சூழலில் ஷின்சோ அபே கடந்து வந்த பாதையை இப்பதிவில் காண இருக்கிறோம். ஷின்சோ அபே, அவர் ஒரு தேசியவாதியா, யதார்த்தவாதியா என்ற விவாதத்தை தன் எதிர்ப்பாளர்களிடமும், தனது ஆதரவாளர்களிடமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருந்தார்.
விமர்சகர்களுக்கு, அவர் ஜப்பானின் பழமைவாத சித்தாந்தத்தை ஆதரிப்பவர். சிக்கலான வெளியுறவு கொள்கைகளை ஆதரிப்பவர். ஆதரவாளர்களுக்கு, தேசியவாத நலன்களை உணர்ந்து உலகளவிய நிலைக்கு ஜப்பானை உயர்த்தியவர். இந்த இரண்டுமே உண்மைக்கு அருகிலே இருப்பதாகவே அரசியல் நிபுணர்களும் ஷின்சோ குறித்து கூறுகின்றனர். தனது பதவிக் காலத்தில் ஜப்பானின் தேசிய அடையாளத்தையும், வரலாற்று மரபுகளையும் உயர்த்துவதற்காக தொடர்ந்து பணியாற்றிய ஷின்சோ அபே, தொழிலாளர் ஜனநாயக கட்சி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அரசியல் பயணம்: ஷின்சோ பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தாத்தா நுபுசிகே கிஷி ஜப்பானின் பிரதமராகவும், தந்தை ஷிந்தரோ அபே வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தவர்கள். 1993-ஆம் ஆண்டு முதல் முதலாக ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷின்சோ. 2005-ஆம் ஆண்டு அமைச்சராகவும் ஆனார். 2006-ஆம் ஆண்டு ஜப்பானின் பிரதமராக ஷின்சோ அபே பதவியேற்றார். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த, ஒருவர் ஜப்பானின் பிரதமராவது அதுதான் முதல் முறை. ஆனால் ஷின்சோவின் பதவிக்காலம் குறுகிய காலமே அமைந்தது. உடல் நலக்குறைவால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு ஜப்பானின் பிரதமரானார். தொடர்ந்து 8 ஆண்டுகள் ஜப்பானின் பிரதமராக இருந்தார் ஷின்சோ. இதில் 2020-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பதவியிலிருந்து விலகினார். அரசியலில் ஷின்சோவின் செல்வாக்கு ஏற்ற, இறக்கங்களுடனே அமைந்திருந்தது. ஆனால் தொழிலாளர் ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராகவே அவர் இருந்து வந்தார்.
சர்ச்சைக்குரிய தேசியவாதி: ஷின்சோ நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்காக பாராட்டப்பட்டாலும் மறுபக்கம் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டும் வந்தார். அவரது தேசியவாத கருத்துகள் பெரும்பாலும் சீனா மற்றும் தென் கொரியாவுடனான ஜப்பானின் உறவில் பதற்றங்களை எழுப்பின. ஜப்பானின் சர்ச்சைக்குரிய தளமான டோக்கியோவின் யசுகுனி ஆலயத்திற்கு (போர் நினைவு ஆலயம்) அவர் அடிக்கடி பயணம் செய்தார். இது ஜப்பானில் உள்ள இடதுசாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
2015-ஆம் ஆண்டில், கூட்டுத் தற்காப்புக்கான உரிமையை அவர் முன்வைத்தார். ஜப்பான் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தாக்குதலுக்கு உள்ளாகும் நட்பு நாடுகளை தற்காத்துக் கொள்ளவும் வெளிநாடுகளில் துருப்புக்களை அணிதிரட்டவும் அவர் முயற்சித்தார். ஜப்பான் பொதுமக்கள், அண்டை நாடுகள் எதிர்ப்பையும் மீறியும் ஷின்சோவின் இத்திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கியது.
ஜப்பானின் ராணுவத்தை முறையாக அங்கீகரிப்பதற்காக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று ஷின்சோ விரும்பினார். ஷின்சோவின் குறிக்கோளும் அதுதான். ஷின்சோவின் இத்திட்டம் ஜப்பானில் தற்போது வரை விவாதத்துக்குரிய தலைப்பாகவே உள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஷின்சோ நல்ல நட்புறவில் இருந்தார். இதன் காரணமாக ஜப்பானில் அமெரிக்க படைகள் இருப்பதற்காக அவரது கூடுதலாக செலவு செய்ய நேர்ந்தது.
பொருளாதாரம் - கரோனா
அபேவின் பொருளாதாரக் கொள்கைகள் - அபேனோமிக்ஸ் (Abenomics ) என்றே அறியப்படுகிறது. உண்மையில் அவரது பொருளாதார கொள்கைகள் ஜப்பானின் வளர்ச்சிக்கு உதவின. எனினும் 2020-ஆம் ஆண்டு ஜப்பானின் பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்ற போது ஷின்சோ கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும் கரோனா தொற்றும் அபேவின் புகழுக்கு சேதத்தை ஏற்படுத்தியது.
ஷின்சோ அபே, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, ஆரோக்கியமற்ற வேலை கலாசாரங்களை மாற்றவும் பல்வேறு திட்டங்களை வைத்திருந்தார். சர்வதேச அளவில், டிரான்ஸ்-பசிபிக் கூட்டத்தில், 11 நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை - நடத்திய பெருமை ஷின்சே அபேவுக்கு உண்டு.
ராஜினாமா - மரணம்: 2020 ஆம் ஆண்டு ஷின்சோ ஜப்பான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தது தொழிலாளர் ஜன நாயகக் கட்சியில் உட்கட்சி பூசலுக்கு வழிவகுத்தது.
அவருக்குப் பின் மூத்த அரசியல்வாதியும், நீண்ட கால அமைச்சரவை உறுப்பினருமான யோஷிஹிட் சுகா ஜப்பான் பதவியேற்றார். ராஜினாமாவுக்கு பிறகும் ஜப்பானில் உள்நாட்டு அரசியலில் அபே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார்.
ஜூலை 8 ஜப்பானின் மேல்சபைக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தெற்கு நகரமான நாராவில் அபே பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போதுதான் ஜப்பான் கடற்படையின் தற்காப்புப் பிரிவு முன்னாள் உறுப்பினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.
ஷின்சோ அபேவின் மரணம் ஜப்பான் மக்களிடம் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பான் அரசியல் முகமாகவே ஷின்சோ அறியப்பட்டார். அவரது இழப்பு ஜப்பான் அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
5 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago