மெக்சிகோ: முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்

By செய்திப்பிரிவு

சான் பெட்ரோ ஹவுமெலுலா: மெக்சிகோ நகரின் மேயர் ஒருவர், முதலையை திருமணம் செய்து கொண்ட விநோத நிகழ்வு நடந்துள்ளது.

மத்திய மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இதன் மேயர் விக்டர். இவர் அவ்வூரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமண நிகழ்வின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது. திருமணத்தில் முதலை கிறிஸ்துவ முறைபடி வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தது.

மெக்சிகோவில் இம்மாதிரியான விநோத திருமணங்கள் நடப்பது இது முதன் முறை அல்ல. இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தைச் சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. இயற்கையின் கருணையை வேண்டி இம்மாதிரியான சடங்குகள் பழங்குடிகளால் பின்பற்றப்படுகின்றது.

திருமணம் குறித்து மேயர் கூறும்போது, “ இயற்கையிடம் மழை, உணவு, மீன் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை” என்றார்.

இத்திருமணத்தை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர் எலியா எடித் அகுய்லர் கூறுகையில், “இந்த சடங்கு நிறைய மகிழ்ச்சியை தருகிறது. எனது பழங்குடி இனத்தைக் கண்டு நான் பெருமை கொள்கிறேன். இது ஒரு அழகான சடங்கு” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE