‘‘மறப்போம் மன்னிப்போம்’’ -ஜமால் கஷோகி படுகொலைக்குப் பின்பு முதன்முறை பயணம்: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் துருக்கிக்கு உதவும் சவுதி இளவரசர்

By செய்திப்பிரிவு

அங்காரா: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலைக்குப் பிறகு துருக்கி நாட்டிற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முதன்முறையாக பயணம் மேற்கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துருக்கி, ஜமால் கஷோகி படுகொலையை மறந்து சவுதியின் உதவியை கைகுலுக்கி வரவேற்றுள்ளது.

சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

கசந்துபோன உறவு

உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலையின் பின்னணியில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது.‌ அவரை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது. ஆனால் சவுதி அரேபிய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது.

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கூறி வந்தன. இந்த சம்பவத்துக்கு பின்பு சவுதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகளிடையே உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. பெரும் மோதல் உருவானது.

இந்தநிலையில் சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திய துருக்கி நாட்டிற்கு அவரே அண்மையில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள அதிபர் மாளிகையில் இளவரசர் சல்மானை எர்டோகன் வரவேற்றார். அப்போது இருவரும் கைகுலுக்கியதுடன் ஆரத் தழுவிக்கொண்டனர்.

சவுதி இளவரசர் பின் சல்மான் மற்றும் எர்டோகன்

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய காலகட்டத்தை உருவாக்குவது குறித்து இரு நாடுகளும் உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்துள்ளன. துருக்கிய ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்ய சவுதி முதலீடு செய்ய வருமாறு துருக்கிக் கேட்டுக் கொண்டுள்ளது.

துருக்கிய ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை சவுதிக்கு விற்பனை செய்வது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.

கரன்சி ஸ்வாப் தொடர்பான பேச்சுவார்த்தைகள் - துருக்கியின் குறைந்து வரும் டாலர் இருப்பை மீட்டெடுக்க உதவுவது என இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். பின்னர் எர்டோகன் மற்றும் பின் சல்மான் இருவரும் தனிப்பட்ட முறையிலும் பின்னர் பேசினர்.

கடும் பொருளாதார நெருக்கடியில் துருக்கி

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள சரிவு முக்கியமாக இரு நாடுகளின் வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 5 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. அதே சமயம் துருக்கியின் பொருளாதாரம் சமீப காலமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் வருடாந்திர பணவீக்க விகிதம் வெளியாகியுள்ளது. துருக்கியின் வருடாந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 20 ஆண்டுகளில் அதிகபட்சமாக 61.14% ஆக உயர்ந்தது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலைகள் 5.46 சதவீதம் அதிகரித்துள்ளதாக துருக்கிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் ஆண்டு பணவீக்கம் 54.44 சதவீதமாக உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் மோதலால் துருக்கியில் கடுமையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விலையும் உயர்ந்துள்ளது. துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பும் கடும் சரிவு கண்டு வருகிறது. இதனால் கடும் நெருக்கடியில் துருக்கி உள்ளது.

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவும், அரசியல் பிடியைத் தக்கவைக்கவும் சவுதி அரேபியாவுடனான உறவுகளை மேம்படுத்த துருக்கி அதிபர் எர்டோகன் விரும்புகிறார். அடுத்த ஆண்டு துருக்கடியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்பாக பொருளாதார சிக்கல்களை ஓரளவு குறைக்க வேண்டிய கட்டாயம் எர்டோகனுக்கு உள்ளது.

துருக்கியின் பொருளாதாரம் லிரா சரிவாலும், பணவீக்கம் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து வருவதாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சவூதி நிதி மற்றும் டாலர்கள் வழங்குவது எர்டோகனுக்கு தேர்தலுக்கு முன்னதாக ஆதரவை அதிகரிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வாய்ப்பை பயன்படுத்தும் சவுதி

இதுபோலவே சவுதி அரேபியாவும் இதில் ஆர்வம் காட்டி வருகிறது. துருக்கியுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் தனது பிராந்திய சக்தி பிம்பத்தை மீட்டெடுக்க விரும்புகிறது. தனது போட்டியாளராக உள்ள ஈரானை தனிமைப்படுத்த சவுதி முயன்று வருகிறது.

துருக்கியுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் சவுதி அரேபியா தனது போட்டியாளரான ஈரானின் மீது அழுத்தத்தை அதிகரித்து அந்த பகுதியில் புதிய அதிகார சமநிலையை உருவாக்க விரும்புகிறது.

இதுகுறித்து துருக்கி நாட்டின் மூத்த செய்தியாளர்கள் கூறுகையில் ‘‘2018 ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமான கட்டத்தை எட்டியது உண்மைதான். ஆயினும் மத்திய கிழக்கில் சவுளதி அரேபியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான பகை ஓஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் காலத்திலிருந்தே உள்ளது.

துருக்கி மற்றும் சளதி அரேபியா ஆகிய இரண்டுமே, சன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளாகும். இரு நாடுகளுக்கும் இடையே போட்டி நிலவுவதும் உண்மையே. ஆனால் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தற்போது இருநாடுகளையும் ஒரு நேர்கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. இருநாடுகளுமே புவிசார் அரசியலில் புதிய தேவையை முன்னிறுத்தி கைகோர்க்க தயாராகி விட்டன’’ எனக் கூறினர்.

இரு நாடுகளும் வர்த்தகம், விமானங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் திரையிடல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டதாகவும், பரஸ்பர எதிர்மறையான ஊடக விமர்சனங்கள் நிறுத்தப்படுவதாகவும் துருக்கிய அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி எகிப்து மற்றும் ஜோர்டானிலும் பின் சல்மான் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கோவிட் -19 மற்றும் ஜமால் கஷோகி கொலைக்குப்பிறகு, முகமது பின் சல்மான் இந்த பகுதியில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணமும் சவுதி அரேபியாவின் புவிசார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

(ராய்ட்டர்ஸ் தகவல்களுடன்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்