உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து விட்டது. இந்தத் தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை, மக்கள் அகதிகளாக வெளியேற்றப்படுவதும் நிற்கவில்லை.
போரின் தொடக்க நாட்களில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளும், அதன் தாக்கங்களும் ஏறக்குறைய குறைந்துவிட்டன. உக்ரைன் பாதிப்புகளைப் பேசிய உலக நாடுகள் தற்போது போரால் தங்களுக்கு என்ன பாதிப்பு என்று கவலைப்படத் தொடங்கிவிட்டன. ஒரு கமர்ஷியல் சினிமா வெளியான ஆரம்ப நாட்களின் பரபரப்பு போலவே விவாதங்களும் கவனமும் குவிந்து பின்னர் மறக்கப்பட்டுவிட்டன.இந்த நிலையில், இனவரைவியலாளர் (Ethnography) ரோமெய்ன் ஹூட் (Romain Huët) போர் பற்றிய பார்வை இங்கு கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
போர் பற்றிய பொதுப் பார்வையில் இருந்து விலகி இருந்தாலும், அதன் நோக்கத்தை நாம் கொஞ்சம் நிதானமாக உள்வாங்க முயற்சி செய்யலாம். ஒரு பெரிய வீழ்ச்சியின் பின்னணியை, அதன் உடனடி பாதிப்புகளை விடுத்து, அந்த வீழ்ச்சிக்கான மக்களின் நடவடிக்கைகளை கவனிப்பதன் மூலம் எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என நம்பிக்கை அளிப்பதாக நீள்கிறது அந்தப் பார்வை.
கீவ்-ல் நான்: “நான் சந்திக்கும் ஒருவருடன் என்னால் நல்ல உரையாடல்களை உருவாக்க முடியும் என்று களத்தில் இருக்கும்போது நான் உணர்ந்துள்ளேன். ஆனாலும் ஆய்வாளர்களுக்கும், நிருபர்களுக்கும் இடையில் சரியான காரணம் இல்லாமல் ஒரு போட்டி நிலவி வருகிறது. அவர்களுக்குள் ஒரு சிறந்த இணைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் கடினமானது. களத்தில் நான் கேட்ட பல தகவல்கள் கிடைத்ததே இல்லை. போரும் அதனை ஆவணப்படுத்துவதில் உள்ள சாவல்களும் போட்டியும் மட்டும் உண்மையானது. அழிவின் அச்சுறுத்தலில் மக்கள் இருக்கும்போது, அது நாம் எதிர்பார்க்கும் ஒற்றுமையை ஊக்குவிப்பதில்லை. போர் ஒரு குறிப்பிட்ட மனநிலையை கோருகிறது. அதாவது நிலைமையை புரிந்து கொள்வதற்கு சூழலோடு ஒத்துப்போக வேண்டும். திறந்த மனநிலையோடு இருக்க அதுவே சிறந்த வழி.
போத்தன் எனும் தூதன்: நான் ஏப்ரல் 15-ம் தேதி போலந்தில் உள்ள லுப்ளினைச் சென்றடைந்தேன். எனது பயண நிறுவனம் விமான நிலையத்தில் என்னுடைய முதுகுப் பையை தவறவிட்டிருப்பது தெரியவந்தது. எனக்கு அதிர்ச்சியாகவும் பதற்றமாகவும் இருந்தது. காரணம் அன்றே நான் போலந்து எல்லையைக் கடக்க முடிவு செய்திருந்தேன். என் பயணத்தின் முதல் திட்டமே அதுதான். முடிந்த வரையில் விரைவாக உக்ரைன் சென்று விட வேண்டும். போலந்தில் தங்கும் விடுதிக்கு பணம் செலுத்திய பின்னர், உக்ரைன் செல்வதற்கான அடுத்த ரயில் எப்போது என்று தெரிந்து கொள்ள டாக்சியில் ரயில் நிலையம் சென்றேன். ஆனால், அந்த டாக்சி பயணம் எனக்கு ஓர் ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருந்தது. தனது படிப்பு செலவிற்காக டாக்சி ஓட்டும் 21 வயது போத்தனை நான் அந்தப் பயணத்தில் சந்தித்தேன். அவர் ஓர் உக்ரைனியர். நான் எனது திட்டத்தை அவரிடம் விவரித்தேன். அவர், நான் உக்ரைன் செல்வதற்கான நல்ல வழியை கண்டுபிடிக்க உதவி செய்வதாக சொன்னார்.
என்னை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிடாமல், தகவல் சேகரிப்பதில் உதவுவதற்காக ரயில் நிலையத்திற்குள் என்னுடன் வந்தார். அங்கு கீவ் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு பின்னர்தான் ரயில் இருப்பதாக சொன்னார்கள். நான் மனமுடைந்து போனேன். போத்தன் பேருந்து நிலையம் போகலாம் என்றார். அங்கேயும் ஈஸ்டர் காரணமாக புதன்கிழமை வரையில் பேருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. என்னால் அவ்வளவு நாள் காத்திருக்க முடியாது. போத்தன் என்னை மீண்டும் லுப்ளின் நகரத்திற்கு அழைத்து வந்தார். அவருக்கான கார் கட்டணத்தை வாங்க மறுத்து விட்டார். "இதை நான் உக்ரைனியர்களுக்காக செய்கிறேன். இந்தப் பணத்தை உங்களின் நிறுவனம் உங்களுக்கு கொடுத்திருந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் அதையும் நான் செய்ய விரும்பவில்லை" என்று பணத்தை வாங்க மறுத்து விட்டார்.
போத்தன் கடந்த இரண்டு ஆண்டுகளாகபோலந்தில் வசித்து வருகிறார். அவரது குடும்பம் உக்ரைனில் இருக்கிறது. இந்த 21 வயதில் மூன்று கார்கள் வைத்து டிராவல்ஸ் நடத்துகிறார். அவர் என்னுடன் உக்ரைனுக்கு வர விரும்பினார். தனது கார் முழுவதும் குடும்பத்திற்கும், உக்ரைனில் தான் சந்திக்கும் மனிதர்களுக்கு வழங்குவதற்கான பொருள்களை நிரப்பிக் கொள்ள விரும்பினார். "நான் வாழ்க்கையின் இந்த மாற்றத்தை விரும்புகிறேன். ஒரு புதிய திசையில் செல்வதற்காக எனது பங்களிப்பைச் செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்க விரும்புகிறேன்" என்று சொன்னார்.
ஆனாலும் அவரிடம் ஒரு தயக்கம் இருந்தது. அதை என்னால் உணர முடிந்தது. இதுபோன்ற பயணத்திற்கு சில மணி நேரங்களில் ஒருவரால் தயாராகி விட முடியாது. ஆனால் நான் மிகவும் அவசரத்தில் இருந்தேன். கடைசியில் போத்தன், எல்லை வரையில் என்னை அவரின் காரில் கொண்டு போய் விட்டார். அங்கிருந்து ஓர் உக்ரைனிய குடும்பம் என்னை அவர்கள் நாட்டிற்குள் அழைத்துச் செல்ல ஒத்துக்கொண்டது. நான் ஏப்ரல் 17-ம் தேதி அளவில் அங்கு சென்றடைந்தேன்.
கலைகள் எதிர்கொள்ளும் போர்: 2022, ஏப்ரல் 18-20. சூரியனின் சலசலப்புக்கிடையில் லிவியின் தெருக்கள் மக்களால் நிரம்பத் தொடங்கி இருந்தது. முதல் பார்வையில் அனைத்தும் இயல்பாக இருப்பதாக தோன்றினாலும், மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஆழமாக வேரூன்றியிருந்தன. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதிலிருந்து கீவ், கிழக்கு உக்ரைனில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு லிவி அடைக்கலம் தந்திருக்கிறது. நகரத்தில், இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. மது விற்பனைக்கு அனுமதி உண்டு அதுவும் இரவு 8 மணிக்கு பிறகே. எரிசாராயம் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. நகரின் தெருக்களில் தன்னார்வலர்கள் ஏற்படுத்தியிருக்கும் தடுப்புகள் வழிமறிக்கின்றன. ஜன்னல்களில் பாதுகாப்புக்காக சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதே போல நினைவுச்சின்னங்களை குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க, அவைகள் மணல் மூட்டைகள், தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன.
நான் அங்கிருந்த நாட்களில், நகரைச் சுற்றி ஆறு ஏழு சைரன் சத்தங்கள் கேட்டன. அவை மக்களின் கூட்டுவாழ்க்கையை கொஞ்சம் பாதித்தன. சிறிது நேரத்தில் இயல்பு திரும்பியது. லிவியில் கூட்டு நடவடிக்கை, ஏற்பாடுகளின் மூலமாக பின்னப்பட்ட ஒரு போர் கால பொருளாதார சூழல் நிலவுகிறது. மறைமுகமாக, மக்கள் முன்களப்பணிகளில் பங்கேற்கிறார்கள், அகதிகளை ஏற்றுக்கொள்கிறார்கள், சர்வதேச தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, நிதியாதரத்தை உருவாக்குகிறார்கள். இந்த செயல்பாடுகள், போர்காலத்திலும் ஒரு பொருளாதார அமைதிக்கு வழிவகுக்கிறது. நிகழ்வுகளை வெளிப்படுத்த கலை ஒரு சிறந்த மொழி. நான் கலைஞர்களை சந்தித்து அவர்களின் எண்ணங்கள், எதிர்ப்புணர்வுகளை அறிய விரும்பினேன்.
வீதி கலைஞன் டென்னிஸ் மெட்லின்: கிரிமிய தீபகற்பத்தை சேர்ந்த ஒரு வீதிக் கலைஞன் டென்னில் மெட்லின். 2014-ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா ஆக்ரமித்த போது, டென்னிஸின் தந்தை அவரை லீவ் ரயிலில் ஏற்றி லிவிக்கு அனுப்பி வைத்தார். அன்று அவருக்கு 19 வயது. அப்போதிருந்தே போர் அவரைத் துரத்திக் கொண்டிருக்கிறது. அவரும் தனது படைப்புகளின் மையமாக போரையே வைத்திருக்கிறார். ஆனால் போரின் சோகத்தைக் காட்டுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். "வெடிகுண்டுகளைப் புரிந்து கொள்ள உங்களுக்கு புதிய பார்வை ஒன்று தேவை" என்கிற டென்னிஸ், தனது படைப்புகளில் சோவியத் யூனியனின் குறியீடுகளை அதிகம் பயன்படுத்தி அதன் அர்த்தங்களை மாற்றியமைக்கிறார். அவரது படைப்புகள் போரின் பயங்கரங்களில் இருந்து விலகி நிற்கிறது, கூட்டு உக்ரைனிய படைகளைக் கொண்டாடுகிறது.
ரஷ்ய தாக்குதலின் முதல் இரண்டு நாட்கள், டென்னிஸ் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களைப் பின் தொடர்ந்து நகர் ஒரு தன்னார்வ நிலையத்திற்கு சென்றார். என்ன செய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. அதன் பிறகு அவர் முதலுதவி அளிப்பதற்கும், சண்டையிடுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொள்கிறார். ரஷ்யர்களை எதிர்கொள்வதற்காக தற்போதும் வாரத்தின் மூன்று நாட்கள் இந்த பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.
விக்டர் குதின், ஓவியர்: நான், கட்டிடக் கலைஞர், ஓவியரான விக்டர் குதினையும் சந்தித்தேன். ஒரு கலைஞராக உக்ரைன் ராணுவத்திற்காக குதின் நிதியும் திரட்டுகிறார். அவரின் மனதில் ரஷ்ய தாக்குதல் உண்மையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் லிவியில் அவரை பார்க்கலாம். தெருக்களில் வீடுகளில் படம் வரைந்து கொண்டிருப்பார்.
அவரது ஓவியங்கள் மாற்றப்பட்ட நிலப்பரப்பை காட்சிப்படுத்துகின்றன. நடைபெறும் போருக்கான சாட்சியாக இருக்கின்றன. பொது சுவர் ஒன்றில் வரையப்பட்ட அவரது ஓவியம் ஒன்று புதினை அவமதிக்கிறது. அவரது ஒரு ஓவியத்தில் வீடுகள் இருக்கின்றன. புகைப் போக்கியில் இருந்து புகை வெளியேறுகிறது. காற்றில் உக்ரைனிய கொடி அசைந்து கொண்டிருக்கிறது. குதினின் ஓவியங்களில் மனிதர்கள் இல்லை.
விக்டர் கண்ணீருக்கும் வெறுப்புக்கும் இடையில் அலைக்கழிக்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தார். இத்தனை தீவிரமான உணர்வுகளுடன் என்னால் வாழ முடியாது. நான் இவைகளுக்கு பெயர்வைக்க விரும்புகிறேன். அவைகளைப் புரிந்து கொள்ள விரும்புகிறேன் என்னும் விக்டரின் தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொள்கின்றன." நாங்கள் ரஷ்யாவை அழிக்கப்போகிறோம். அவர்கள் அனைவரையும் கொல்லப்போகிறோம்" அவரின் கோபம் வார்த்தைகளுக்கு விடுதலையளிக்கிறது.
ஓய்வறியா மார்டா: மார்டா ட்ரொட்சியுக் காட்சிக் கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். போர் தொடங்குவதற்கு முன்பாக, அவர் லிவி முழுவதும் கண்காட்சிகள் ஏற்பாடு செய்து வந்தார். தற்போதைய அவசர நிலையை சமாளிக்க நகரத்தில் இருக்கும் கலைஞர்களிடையே ஒற்றுமையை வளர்க்க முயற்சிக்கிறார். அவர் சுறுசுறுப்பானவர், ஓய்வறியாதவர். வர இருக்கிற வெனிஸ் பைனாலே (Venice Biennale) நிகழ்வில் பங்கேற்க மார்டா அழைக்கப்பட்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை உக்ரைன் கலைகளின் தனித்துவத்தை வெளிப்படுத்த இது ஒரு முக்கியமான தருணம்.
"பிரச்சாரங்களை பரப்புவதற்கு கலைகளை பயன்படுத்துவது ரஷ்யாவின் வழிமுறைகளில் ஒன்று. கலை மென்மையான அதிகாரம் கொண்டது,எளிமையானது" என்று கூறும் மார்டா, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்ய கலைஞர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு மனு மற்றும் கடிதங்கள் சேகரித்துக்கொண்டிருக்கிறார்.
பொக்கிஷங்களை பாதுகாக்கும் பிரைலின்ஸ்கா: லிவியில் உள்ள "டெரிட்டரி ஆஃப் டெரரி" நினைவு அருங்காட்சியகத்தில் பணிபுரிகிறார் போக்டானா பிரைலின்ஸ்கா. போரின் தொடக்கத்தில் இருந்து போக்டானா உக்ரைன் முழுவதும் உள்ள கலைகளை பாதுகாக்க முயற்சி செய்து வருகிறார். குறிப்பாக உக்ரைனின் தேசிய கலாச்சார பாரம்பரியம் அதிகம் காணப்படும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள கலைச் சின்னங்களை பாதுகாக்கும் முயற்சியில் உள்ளார். "எங்களின் நோக்கம் மரியுபோல், பிற நகரங்களில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதே" என்கிறார் போக்டானா.
இதற்காக நாடுமுழுவதும் தன்னார்வலர்களுக்குள் ஒரு ஒருங்கிணைந்த தொடர்பு இருக்கிறது. மெய்டன் புரட்சியில் இருந்தே தன்னார்வலர்கள் ஒருகுழுவாக செயல்பட்டு, தொடர்பினை வளர்த்து வந்துள்ளனர். பொக்கிஷங்களை இடம் மாற்ற அரசாங்கத்தின் ஆணையை எதிர்பார்க்காமல், இவர்களாகவே அந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர். அப்படி கலைப்பொருள்களை இடம் மாற்றும் போது கொஞ்சம் சிரமமாக இருக்கும். எங்களிடம் முறையான அனுமதி கிடையாது. அதனால் நாங்கள் அவைகளை கடத்திச் செல்லவில்லை என்றும், அதனை பாதுகாக்க முயற்சிக்கிறோம் என்றும் செக்பாயிண்டில் விளக்க வேண்டியது இருக்கும். சில சமயம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டியதும் இருக்கும்" என்கின்றனர் தன்னார்வலர்கள்.
இத்தகைய சூழ்நிலைகளில் எதிர்ப்பு என்பது உலகின் பொருளை, நாட்டின் நினைவுகளை பாதுகாப்பது, உங்களால் முடிந்த அளவு உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதாகும். நான் லிவியிலிருந்து வெளியேறி கீவ், கார்கிவ் செல்கிறேன்.”
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago