இந்தியாவின் புவிசார் அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் இந்தியப் பெருங்கடலை சுற்றி சீனா தனது காய்களை ஏற்கெனவே நகர்த்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் கைகோர்த்து இந்தியா பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் மேற்கு இந்திய பெருங்கடலை கபளீகரம் செய்யும் திட்டத்துடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அண்மையில் மேற்கொண்டு சுற்றுப்பயணம் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பெருங்கடல் என்பது உலகின் 3-வது மிகப்பெரிய கடலாகும். பல ஆண்டுகளாகவே இந்தியப் பெருங்கடல் முழுவதும் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே இருந்து வந்தது. 73,42,7000 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள இந்திய பெருங்கடல் பகுதியின் மேற்கில் விக்டோரியா மற்றும் அமிராண்டே போன்ற தீவுகளும், வடக்குப் பகுதியில் மாலத்தீவுகள், இலங்கை மற்றும் பாலி போன்ற சிறு தீவுக் கூட்டங்களும், தெற்குப்பகுதியில் காகோய் தீவுக்கூட்டமும், வடமேற்குப் பகுதியில் லட்சத் தீவுகளும் அமைந்துள்ளன.
‘ஆழமான’ கடல்
உலக மக்கள் தொகையில் மொத்தம் 35 சதவீதம் பேர் இந்த நாடுகளில் வசிக்கின்றனர். எண்ணிக்கை அடிப்படையில் இது 250 கோடி பேர் ஆவார். இதுமட்டுமின்றி அதிகமான வளர்ந்து வரும் நாடுகளும் இந்த பகுதியில் தான் அமைந்துள்ளன. உலக அளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் இந்திய பெருங்கடல் வழியாக தான் 80 சதவீ்தம் நடைபெறுகிறது.
» ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை: பள்ளி முதல் பார்ட்டி வரை - நடந்தது என்ன?
» வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
இந்திய பெருங்கடல் பகுதியில் தாமிரம், துத்தநாகம், புரோமியம் போன்ற பொருள்கள் அபரிமிதமாகக் கிடைத்த வண்ணம் உள்ளன. இறால் போன்ற விலை உயர்ந்த மீன்கள் மற்றும் கடல் சார் உணவுப்பொருட்கள் இப்பகுதிமக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. இதுமட்டுமின்றி பல அபூர்வ தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் கொண்ட பகுதியாக இந்திய பெருங்கடல் விளங்குகிறது.
உலகத்தின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழித்தடம் சூயஸ் கால்வாய் மற்றும் மலாக்கா நீரிணை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி ஆகும். இதுதான் ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் உள்ள முக்கிய நாடுகளுக்கு இடையேயான கப்பல் வழித்தடம் அமைந்துள்ள பகுதி. அதாவது இந்த வழித்தடத்திலேயே உலகின் பெருமளவு வணிகம் நடைபெறுகிறது. இதுமட்டமின்றி இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகள், கிழக்கு ஆபிரிக்க நாடுகள் போன்றவை வேகமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் புவிசார் அரசியல் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக சீனா இந்திய பெருங்கடல் பகுதியில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இப்பகுதி முக்கியத்துவம் பெற்று வருகிறது.
ஜி ஜின்பிங் திட்டம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என சொல்லப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் ஆகும்.
அதாவது துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சரக்கு முனையங்கள், போன்றவற்றை சாலை மார்க்கமாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் இணைப்பதே இந்த திட்டம். இதன் மூலம் எளிதாக சரக்கு போக்குவரத்து செய்யப்படுவதுடன், உலகம் முழுவதும் உள்ள தொழில் முனையங்கள் ஒன்றிணைக்கப்படும். நாடுகளை சாலை வழி மூலம் இணைப்பதால் சர்வதேச அளவில் சரக்கு போக்குவரத்துக்கு வழி ஏற்படும் என சொல்லப்பட்டது.
சாலைகள் மூலம் ஆசியாவில் உள்ள முக்கால்வாசி நாடுகளை சீனாவுடன் இணைப்பதற்காக சில்க் ரோட் எக்கனாமிக் பெல்ட் (Silk Road Economic Belt) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உலக நாடுகளை சாலை வழியாக இணைப்பது மட்டுமின்றி அதனை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவும் முடியும் என சீனா நம்புகிறது.
கிழக்கு ஆசியாவில் இருந்து மேற்காசியா வழியாக ஆப்ரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பிய நாடுகளையும் சீனாவுடன் கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் மேரிடைம் சில்க் ரோடு (Maritime Silk Road) திட்டம் இரண்டாவதாக செயல்படுத்தப்படுகிறது. அடுத்ததாக ரஷ்யாவுடன் இணைந்து சீனா மேற்கொள்ளும் ஐஸ் சில்க் ரோடு (Ice Silk Road) திட்டம். இதன்படி ரஷ்யா வழியாக ஆர்டிக் கடல் பகுதியில் இருக்கும் நாடுகளையும் இணைக்க முடியும்.
இவை அனைத்துக்கும் மையப் புள்ளி என்பது இந்திய பெருங்கடல் தான். அண்டை நாடுகளின் நிலம் மற்றும் கடல் பிரதேசங்களைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து வரும் சீன நாடு, இந்தியப் பெருங்கடல் பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை.
இதுமட்டுமின்றி சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பல நூற்றுக்கணக்கில் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் முகாமிட்டு லட்சக் கணக்கான டாலர் மதிப்புள்ள மீன்களைப் பிடித்துச் செல்கின்றன. கடலோரக் காவல் ரோந்துக் கப்பல்கள், உளவு விமானங்களின் மூலம் இந்தியா கண்காணித்து வருகிறது.
மேற்கு இந்தியப் பெருங்கடல்
இந்தநிலையில் மேற்கு இந்தியப் பெருங்கடலில் சீனா கடந்த சில மாதங்களாக தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் எரித்திரியா, கென்யா, கொமொரோஸ், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய ஐந்து நாடுகளுக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவை அனைத்தும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளாகும்.
கென்யா, மொசாம்பிக், சோமாலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தான்சானியா ஆகிய கிழக்கு ஆப்பிரிக்க கடலோர நாடுகளும், கெமொரோஸ், மடகாஸ்கர், மொரிஷியஸ், சீஷெல்ஸ் மற்றும் பிரெஞ்சு பிரதேசங்களான மயோட் மற்றும் ரீயூனியன் போன்றவையும் மேற்கு இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள நாடுகளாகும்.
அங்கு இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கும் போட்டியில் சீனா ஏற்கெனவே தீவிரம் காட்டி வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஈக்குவடார், கினியாவில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் பெய்ஜிங் தனது நிரந்தர ராணுவத்தை நிலை நிறுத்தியுள்ளன.
வாங் யீ சுற்றுப் பயணம்
மேற்கு இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவம் வாய்ந்த மடகாஸ்கர், கொமொரோஸ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளையும் தன் வயப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. வாங் யீ மேற்கொண்ட பயணம் இதன் முன்னோட்டமாகும்.
இதன் தொடர்ச்சியாக மடகாஸ்கர், கொமொரோஸ் மற்றும் சீஷெல்ஸ் நாடுகளில் போக்குவரத்து, வர்த்தக விநியோக மையங்கள் மற்றும் தளவாட சேமிப்பு பகுதிகள் அமைக்கவும் சீனா திட்டமிட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த நாடுகளில் வர்த்தக முதலீட்டு திட்டங்கள் என்ற பெயரில் முன் வைக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாகும்.
கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கெனவே சீனாவின் பெல்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளன. இந்த நாடுகள் சீன ஆதரவையும் நிதியுதவியையும் நாடுகின்றன. வாங் யியின் வருகையின் போது, மொம்பாசா துறைமுகத்தில் ஒரு எண்ணெய் முனையம் திறக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் கடற்கரையில் இது ஒரு முக்கியமான திட்டமாகும். இது 3.6 பில்லியன் டாலர்கள் சீன நிதியுதவியுடன் மொம்பாசா- நைரோபி ரயில் பாதை வரை நீள்கிறது.
2021 டிசம்பரில் செனகலில் உள்ள டாக்கரில் சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு கூட்டம் நடைபெற்றது. இது ஆப்பிரிக்க நாடுகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை முன் வைத்து சீனா நடத்திய கூட்டம். ஆனால் உண்மையில் ஆப்பிரிக்க நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் சீனாவின் முயற்சி இது. கொமொரோஸில் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டை தளர்த்துவதும் சீனாவின் திட்டமாகும்.
கடன் கொடுத்து வளைக்கும் திட்டம்
சீனாவின் பொருளாதாரக் கொள்கை என்பது எந்த ஒரு நாடும் இறக்குமதி செய்யும் பொருட்களை விடப் பத்து மடங்கு தரம் குறைந்த மலிவான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
கோடிக்கணக்கான டாலர்களை சில நாடுகளுக்குக் கடனாகக் கொடுத்து உதவி செய்வது பின்னர் காலப்போக்கில் அந்நாடு அசலையும் வட்டியையும் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கும்போது அந்த நாட்டின் முக்கிய நகரத்தையோ துறைமுகத்தையோ தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறது.
இலங்கைக்கு சில கோடி டாலர்கள் கடன் கொடுத்து அந்நாட்டின் துறைமுகத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. இப்போது கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை எதற்கும் தயார் என்ற நிலைக்கு வந்து விட்டது.
இலங்கை மற்றும் மாலத்தீவுகள் ஏற்கெனவே தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக சீன முதலீடுகளை நாடுவதில் தீவிரம் காட்டி வரும் நாடுகளாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பிடியில் உள்ள முக்கிய நிலைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியிலும் சீனா ஈடுபட்டுள்ளது.
இலங்கையை போலவே மாலத்தீவிலும் சீனாவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. 2018-ம் ஆண்டில் இருந்தே மாலத்தீவிற்கு செல்லும் சீனச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் மாலத் தீவிற்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேசமயம் மாலத்தீவில் சீனாவை விடவும் இந்தியர்களின் முதலீடுகள் இன்னமும் அதிகமாகவே உள்ளன. இதற்கு பதிலடியாக சில நடவடிக்கைகளை இந்தியாவும் மேற்கொண்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் வருகையை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமெரிக்கா, ஜப்பானுடன் இந்தியா
தென் சீன கடலில் பெரும்பகுதியை தனக்கு சொந்தம் கொண்டாடி வருவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. போர்க்கப்பல்களை அந்தப் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தி தென் சீனக்கடல் பகுதியில் உள்ள தனது ஆதரவு நாடுகளுடன் அமெரிக்கா கைகோர்த்து வருகிறது.
இதனை சரியான வாய்ப்பாக இந்தியா பயன்படுத்தியது. தோழமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்படையுடன் கூட்டுப் போர் பயிற்சியை இந்திய கடற்படை மேற்கொண்டது. தொடர்ந்து இதுபோன்ற பயிற்சியில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்திய பெருங்கடலில் இருந்து தனது கவனத்தை சீனா தென் சீனக்கடல் பகுதிக்கு திருப்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய பெருங்கடலை கட்டுப்படுத்த நினைக்கும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா குவாட் நாடுகளின் கூட்டத்தை நடத்தியது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் இணைந்து இந்த குவாட் கூட்டம் சீனாவுக்கு எரிச்சல் தரும் நடவடிக்கை.
போர் பயிற்சி
நான்கு நாடுகளின் போர் கப்பல்களும் இந்த கடல் பகுதியில் போர் பயிற்சியிலும் ஈடுப்பட்டன. இந்திய பெருங்கடலில் இந்தியாதான் ராஜா என்பதை உணர்ந்தும் வகையில் இந்த போர் பயிற்சி அமைந்தது.
இருப்பினும் மேற்கு இந்தியப் பெருங்கடலை மையப்படுத்தி சீனா மீண்டும் தொடங்கியுள்ள நடவடிக்கைகள் உலகளாவிய வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவின் நடவடிக்கைகளால் எரிச்சலை நடந்துள்ள ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளும் மேற்கு இந்திய பெருங்கடலில் ஏற்கெனவே ஆர்வம் காட்டி வருகின்றன.
சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா எந்தவிதத்தில் பதிலடி கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. குறிப்பாக மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் முக்கியமானது என்பதால் இந்தியா இந்த விஷயத்தில் வரும் மாதங்களில் தீவிரமாக இயங்கும் என கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
2 days ago