ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ் பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. மாநாடு 4 நாட்கள் நடைபெறுகிறது பாகிஸ்தானில் இருந்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி தலைமையில் 3 பேர் குழு பங்கேற்றுள்ளது.

மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது குறித்தும், அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தீவிரவாத பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுடனான உறவில் விரிசல், எல்லைப் பிரச்சினை காரணமாக சீனாவுடன் கசப்புணர்வு நீடிக்கிறது. எனினும் ஷாங்காய் ஒத்துழைப்பு தீவிரவாத எதிர்ப்பு மாநாடு திட்டமிட்டப்படி நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE