கரோனாவா? - வடகொரியாவில் இதுவரை காய்ச்சலுக்கு 27 பேர் பலி

By செய்திப்பிரிவு

வடகொரியாவில் காய்ச்சல் காரணமாக 27 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த உயிரிழப்புகள் கரோனா காரணமாகத்தான் எற்பட்டுள்ளதா? என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை. உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரம் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமிக்ரான் வைரஸ் என்று கூறப்படுகிறது.

சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியானதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் கரோனா காரணமாகத்தான் இவர்கள் உயிரிழந்தார்களா? என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை. அனைத்து மரணங்களையும் காய்ச்சல் மரணங்கள் எனப் பதிவு செய்துள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்த மருத்துவப் பரிசோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ளது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமிக்ரான் வைரஸ் என்றும் சீனா வழியாகவே வைரஸ் பரவியுள்ளது என்றும் சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE