கொழும்பு: இலங்கையில் போராட்டம் வலுத்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சமடைந்ததாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. மேலும், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி இருப்பதாக வெளியான தகவலையும் இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், அவரது இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியில் இருந்து விலகாததால் தலைநகர் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் பெரும் வன்முறை வெடித்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த 41 பேரின் வீடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான வாகனங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மகிந்த ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஹெலிகாப்டர் மூலம் 10-ம் தேதி அதிகாலை விமானப்படை மீட்டது. பின்னர் அவர்கள் திரிகோணமலை கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதையறிந்து அங்கு திரண்ட மக்கள், அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சவும் விலக வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மகிந்த ராஜபக்ச, திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் கமல் குணரத்னே நேற்று உறுதி செய்தார்.
இதனிடையே, வன்முறை பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர்மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கும் நேற்று முன்தினம் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தலைநகர் கொழும்பில் ராணுவ வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வன்முறையைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்த முப்படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது போல போலீஸாருக்கும் நேற்று அதிகாரம் வழங்கப்பட்டது.
வன்முறையை கைவிட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச, நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 வாரங்களில் அரசியல் கட்சிகள் இணைந்து இடைக்கால அரசை அமைக்காவிட்டால், பதவி விலகப் போவதாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே நேற்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அடுத்த வாரத்துக்கு பதில் முன்கூட்டியே கூட்டுவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட சபாநாயகர் மகிந்த அபயவர்த்தனே திட்டமிட்டார். ஆனால், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக கூட்டத்தை கூட்டவில்லை. ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இடைக்கால அரசின் பிரதமராக பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். ஆனால், அதிபர் பதவியில் இருந்து கோத்தபய விலகாதவரை பிரதமர் பொறுப்பை ஏற்கப் போவதில்லை என பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐ.நா. கவலை
இலங்கை நிலவரம் கவலை அளிப்பதாகவும் அரசியல் கட்சிகள் இணைந்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டுமெனவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. மேலும், இலங்கைக்கு இந்தியா ராணுவப் படையை அனுப்பி உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியது. ஆனால், இந்த தகவல்களை அங்குள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பொய் தகவல்கள், வதந்திகள் பரப்பப்படுகின்றன. அந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பி இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலும் அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற எண்ணம் எதுவும் இந்தியாவுக்கு இல்லை’ என கூறப்பட்டுள்ளது.
இந்தியா பாடுபடும்
இலங்கை விவகாரத்தில் அண்டை நாடான இந்தியாவின் நடவடிக்கை குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இதையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் ஜனநாயக முறைப்படி அங்குள்ள மக்களின் நலனுக்காக இந்தியா தொடர்ந்து செயல்படும். அண்டை நாடு மற்றும் வரலாற்று உறவு கொண்ட இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட இந்தியா முழு ஆதரவு அளிக்கும். இலங்கை விவகாரத்தில் அங்குள்ள மக்களின் நலனுக்காகத்தான் இந்தியாவின் செயல்பாடுகள் உள்ளன. எந்த அரசியல் தலைவருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ இந்தியா ஆதரவு அளிக்கவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இலங்கையில் சீனா காலூன்றிய விவகாரத்தையும் இந்தியா மறக்கவில்லை. எனினும், இலங்கை மக்களின் நலனுக்காக 350 கோடிடாலர் உதவியை இந்தியா வழங்கி உள்ளது. அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைப்படி நிதியுதவி, அத்தியாவசியப் பொருட்களை மத்திய அரசும், இந்திய மக்களும் வழங்கி வருகின்றனர் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago