தாஜ்மகாலை எலான் மஸ்க் குடும்பத்தினர் பார்வையிட்ட தருணங்கள்... இது 3 தலைமுறைகளின் கதை!

By செய்திப்பிரிவு

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மகாலுக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்றுள்ளனர்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கம். இந்நிலையில், தாஜ்மகாலுக்குதான் சென்று வந்தது குறித்து ட்வீட் செய்துள்ளார் மஸ்க்.

"2007 வாக்கில் நான் தாஜ்மகாலை பார்வையிட்டேன். உண்மையில் உலக அதிசயங்களில் ஒன்று இது" என ட்வீட் செய்திருந்தார் மஸ்க். தொடர்ந்து அவரது அம்மா Maye மஸ்க் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் 2007-இல் தான் தாஜ்மகால் சென்றிருந்ததாகவும். அது மிகவும் அழகாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில், "நான் சென்றது 2007 கிடையாது. அது 2012. எங்கே அந்த எடிட் பட்டன்?" என ட்வீட் செய்தார் அவர்.

தொடர்ந்து மற்றொரு ட்வீட் செய்திருந்தார் Maye மஸ்க். "1954-இல் உனது பாட்டியும், தாத்தாவும் சிறு விமானத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா பயணித்திருந்தனர். அந்த பயணத்தின் போது போகும் வழியில் இருந்த தாஜ்மகாலை அவர்கள் பார்வையிட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற அந்த சிங்கிள் எஞ்சின் Propeller விமானத்தில் ரேடியோ, ஜிபிஎஸ் கூட இல்லை" என தெரிவித்துள்ளார்.

இப்படி மூன்று தலைமுறைகளாக தாஜ்மகாலை பார்வையிட்டுச் சென்றுள்ளது மஸ்க் குடும்பம். தாஜ்மகால் குறித்து மஸ்க் ட்வீட் வெளியானது முதல் அவரது இந்திய வருகை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE