குடும்ப அரசியலுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்: பற்றி எரியும் இலங்கை; கைகொடுக்காத சமரச திட்டம்

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்த மகிந்தா ராஜபக்சே விலகியுள்ள போதிலும் அவரது குடும்ப அரசியலுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. அவரது குடும்பம் நாட்டை விட்டு தப்பி செல்ல முயலும் நிலையில் மக்கள் மட்டுமின்றி சொந்த கட்சியினரும் எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது.

இதனால் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம்

இலங்கை அரசியலில் அங்கம் வகிக்கும் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும், மக்கள் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர் போராட்டக்காரர்கள் கடந்த சில தினங்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையில் போராட்டம் நடத்த வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிபர் மாளிகைக்கு எதிரே முகாமிட்டு போராடி வந்த போராட்டக்காரர்கள் மீது கம்புகளை கொண்டு ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கினர்.

மக்களை தாக்கிய ராஜபக்சே ஆதரவாளர்கள்

இதுமட்டுமின்றி அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களையும் அவர்கள் கிழித்தெறிந்தனர். மேலும் இதர கட்டமைப்புகளையும் அடித்து நொறுக்கினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பரஸ்பரம் மோதிக் கொண்ட இரு தரப்பையும் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்து காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் விரட்டி அடித்தனர்.

கொழும்புவின் புறநகர் பகுதியான நிட்டம்புவில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தனது காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரது காரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

பின்னர் அவர் அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைய முயன்றார். ஆனால் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

தணியாத ஆவேசம்

இதுமட்டுமின்றி மகிந்தா ராஜபக்சே பதவி விலகியுள்ளபோதிலும் அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி கொழும்பு நகரில் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறன. சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர்.

அமைதியாகப் போராடிய மக்கள் மீது ராஜபக்ச ஆதரவாளர்கள் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையே பற்றி எரிகிறது. ஆவேசமடைந்த மக்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டை எரித்தனர். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

சமரச திட்டம் தோல்வி

நாடு முழுக்க அவசரநிலைப் பிரகடனம் அமலில் இருந்தாலும் தொடர்ந்து கலவரம் நடக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும், ராஜபக்சே குடும்பம் ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

மக்கள் கோபத்தை தணிக்க மகிந்தா ராஜபக்சே ராஜினாமா உதவும் என ராஜபக்சே குடும்பம் எண்ணியது. பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜினாமா செய்தால் மக்களின் கோபம் குறைந்துவிடும், கட்சியின் அதிகாரமும் காப்பாற்றப்படும்' என்று எண்ணினர்.

ஆனால் மக்கள் போராட்டம் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியினரே இரண்டு அணிகளாகப் பிரிந்து பிரதமர் பக்கமும் அதிபர் பக்கமும் சென்றுள்ளனர். இதனால் பிரச்சினை தீரவில்லை. இன்று காலை மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார்.

மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப அரசியலுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

மேலும்