உணவு, ரசாயனம் உட்பட பல பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு : ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்றுமதியாளர் குழு உடனடி பயணம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள்பொருளாதார தடை விதித்துள்ளநிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. ரஷ்யாவுக்கு உணவுப்பொருள்கள், செராமிக் மற்றும் ரசாயனப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இம்மாத இறுதியில் இந்திய ஏற்றுமதியாளர்கள் குழு செல்ல உள்ளது.

ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யா சலுகை விலையில் அளித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து உணவு உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய ரஷ்யாஆர்வம் காட்டியுள்ளது. ரஷ்யாவில் அதிக வாய்ப்பு உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இந்திய நிறுவனங்கள் தயாராக உள்ளதாக உணவு மற்றும் குளிர்பானங்களை ஏற்றுமதி செய்யும் குழுவின் உறுப்பினரான விவேக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உணவு, தேயிலை மற்றும் காபி பொருள்கள் சப்ளை செய்வதுதொடர்பாக ரஷ்ய வர்த்தகர்களிடமிருந்து சில கோரிக்கைகள் வந்துள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரிசி, தேயிலை...

ரஷ்யாவில் மிகப் பெரிய உணவுப் பொருள் சங்கிலி விற்பனையங்களைக் கொண்டுள்ள எக்ஸ்5நிறுவனம் இந்தியாவிலிருந்து அரிசி, சலவைத் தூள், தேயிலை,காபி, பழங்கள், ஜவுளி, சோடா,பீர் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய ஆர்டர் அளித்துள்ளது. இது தவிர ரசாயனம் உள்ளிட்ட பொருள் களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இவை பெருமளவில் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சில சவால்கள் உள்ளன. குறிப்பாக ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கான கப்பல் போக்குவரத்து வசதி, காப்பீடு வசதி, ஏற்றுமதி தொகையை எந்த வகையில் பெறுவது என்பது சவாலான விஷயமாகும்.

சுங்கத் துறை கட்டுப்பாடு

சுங்கத் துறையில் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்தவேண்டும் என்று அகர்வால் தெரிவித்துள்ளார். குறிப்பாக லேபிள் உள்ளிட்ட விஷயங்களில் தளர்வுஅவசியம் என்றும், ஏற்றுமதி தொகையைப் பெறுவது உள்ளிட்டவற்றில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை ஏற்றுமதியாளர்கள் பின்பற்றத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் போர் முடிந்தபிறகு ஏற்றுமதிகளை அனுப்பலாம் என்று அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் அரசுசற்று விலகி இருக்கவே விரும்புகிறது. இந்தியாவில் இருந்து கோதுமை, சோளம் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. சர்வதேச தடை விதிக்கப்பட்ட நாளில் இருந்து இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதேபோல மருந்து, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதில் உணவுப் பொருள், சமையல்எண்ணெய் மீது தடை இல்லாத காரணத்தால் இவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய ரஷ்யா தீவிரம் காட்டுகிறது. சில பொருள்களுக்கான தொகையை அளிப்பதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

இப்போது அத்தகைய வழிமுறைகள் பின்பற்றுவதாக ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்தார். அதேசமயம் ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி ஏற்றுமதி தொகையை அளிப்பது தொடர்பாக ஒரே விதமான நடைமுறையை அரசும், ரிசர்வ் வங்கியும் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE