‘‘இது மஸ்க் ட்விட்டர்’’- மாறும் விதிமுறைகள்; வரப்போகும் மாற்றங்கள் என்ன?- எப்படி பணம் திரட்டுகிறார் எலான் மஸ்க்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கும் நிலையில் அதற்கான நிதி, வருவாயை எப்படி திரட்டப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுபோலவே ட்விட்டர் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு பதிலாக கட்டணம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது.

ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் மஸ்க், அதனை கைபற்ற வேண்டும் என்ற தனது கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதாவது ட்விட்டரில் ஒருவர் தவறாக கருத்து தெரிவித்து இருந்தால் அதனை திருத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த சூழலில் தான் அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.

ட்விட்டர் மற்றும் மஸ்க் தரப்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடக்கத்தில் நிறுவனத்தை விற்க ட்விட்டர் முதலீட்டாளர்கள், ஊழியர்கள் விரும்பவில்லை. ட்விட்டர் நிர்வாகக் குழு உடனான நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு வாங்கிய மஸ்க்

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 3,35,800 லட்சம் கோடி) தொகையில் வாங்கியுள்ளார். ஆனால் ட்விட்டர் நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு என்பது 39.48 பில்லியன் டாலர்கள் மட்டுமே. சந்தையில் இன்றைய நிலையில் விற்க வாய்ப்புள்ள தொகையை விட 5 பில்லியன் டாலர்கள் அதிகம் கொடுத்து எலான் மஸ்க் வாங்கியுள்ளார். கூடுதல் தொகை கொடுத்ததாலேயே அதனை விற்க ட்விட்டர் நிறுவனமும் முன் வந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய முதலீடுகளை பொறுத்தவரையில் சொத்து மதிப்பில் 40.98 சதவீதம் மியூச்சுவல் பண்ட் முதலீடு செய்துள்ளது. இதனைத் தவிர நிறுவனங்களின் முதலீடு 36.94 சதவீதமாகும். மேலும் பல்வேறு தனிநபர்கள், குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களின் பங்கு என்பது 12.48 சதவீதமாகும்.

இந்திய ரூபாய் மதிப்பில் 3,35,800 லட்சம் கோடியை ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் தர வேண்டிய சூழலில் அதனை எவ்வாறு செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை அவர் எவ்விதம் திரட்ட வாய்ப்புள்ளது.

எலான் மஸ்க் பங்கு வெளியீடு, தனிநபர்களுக்கு பங்கு உரிமை தந்த அதன் மூலம் பணம் திரட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பில்லை. அதனை அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்புக்கு அவர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி ட்விட்டர் நிறுவனத்தை அவர் தனது சொந்த நிறுவனமாகவே நடத்த விரும்புகிறார்.

நிதி திரட்டுவது எப்படி?

அப்போது மட்டுமே தான் விரும்பும் மாற்றங்களை ட்விட்டரில் செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார். கருத்துச் சுதந்திரம் உட்பட பல விஷயங்களையும் அப்போது மட்டுமே செய்ய முடியும். மற்றவர்களுக்கு பங்குகள் கொடுத்தால் அவர்களது விருப்பத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். எனவே ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் சொந்த நிறுவனமாக, ‘மஸ்க் டவிட்டராக’ இருப்பதையே அவர் விரும்புகிறார். இந்த சூழலில் பணம் திரட்டுவது என்பது பெரும் சவாலான ஒன்றாகும்.

தற்போதைய சூழலில் வங்கி கடன்கள் 13 பில்லியன் டாலரை திரட்ட முடியும். இதுதவிர நிறுவனங்கள் உட்பட மற்ற கடன்கள் மூலம் 12.5 பில்லியன் டாலரை திரட்ட வாய்ப்புண்டு. இந்த இரண்டை தவிர அவர் 21 பில்லியன் டாலர்கள் திரட்ட வேண்டும். எலான் மஸ்க்கின் தனிப்பட்ட பணமாக 3 பில்லியன் டாலர்கள் மட்டுமே உள்ளது.

எலான் மஸ்க் தன்னிடம் இருக்கும் 170 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளின் சிறு பகுதியை விற்பனை செய்து 12.5 பில்லியன் டாலர் நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அவரது பங்குகிற்கு 21 பில்லியன் டாலர் தொகை தேவை. இதற்கு அவருக்கு ஸ்பேஸ் எக்ஸ், போரிக் கம்பெனி, நியூராலிங்க் வேறு நிறுனவங்களின் பங்குகள் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களையும் விற்று பணம் திரட்ட முடியும். இதுமட்டுமின்றி சில முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை பெற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக எலான் மஸ்க் ஏற்கெனவே பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரப்போகும் மாற்றங்கள்

இதுமட்டுமின்றி ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் எவ்வாறு நடத்தப்போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. அதன்படி ட்விட்டரில் கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதில் மஸ்க் தெளிவாக உள்ளார். இதனால் மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்படுவது இந்த ட்விட்டரில்தான். என்னை விமர்சனம் செய்தவர்களும் இந்த ட்விட்டர் தளத்தில் இருக்க வேண்டும், அதுதான் கருத்து சுதந்திரத்தின் அர்த்தமாகும் என எலான் மஸ்க் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். ஆனால் கருத்து சுதந்திரத்தை நோக்கிச் சென்றால் வெறுப்பு பேச்சுகளும் பகிரப்படுமே என மனித உரிமை குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் எடிட் பட்டனை அனுமதிக்க வேண்டும் என மஸ்க் ஏற்கெனவே கேட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா என தனது ட்விட்டர் பக்கம் மூலம் ஒரு கருத்து கணிப்பை மஸ்க் நடத்தினார். இதில் 40 லட்சம் பேர் வாக்களித்தனர். அதில் 70 சதவீதம் பேர் எடிட் பட்டன் வேண்டும் என்றனர்.

முன்றாவதாக விளம்பரங்கள் விஷயத்திலும் அவர் கருத்து கொண்டுள்ளார். விளம்பரங்களுக்காக சமுகவலை தளத்தை நடத்தும்போது அதில் உள்ள பிரச்சினைகளையும் சந்திக்கும் சூழல் ஏற்படும். எனவே விளம்பரங்களைப் பற்றி கவலையின்றி நடத்த வேண்டும் என்பது அவரது எண்ணமாகவுள்ளது. ட்விட்டரை வருவாய் ஈட்டுவதற்காக நடத்த வில்லை என அவர் கூறுகிறார்.

கட்டணம் வசூலிப்பு?

ட்விட்டர் வருவாயைப் பொறுத்தவரையில் தற்போது 5 பில்லியன் டாலராக உள்ளது. அதேசமயம் கூகுள் 257 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது. பேஸ்புக் 117 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது. இந்த வருவாய் பெரும்பாலும் விளம்பரங்கள் சார்ந்ததே. அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களை விரும்பியிருந்தால் அவர் வேறு நிறுவனத்தை வாங்கியருப்பார். ஆனால் வருவாய் இல்லாமல் நிறுவனத்தை எப்படி நடத்த முடியும்.

எனவே ஓடிடி தளங்கள் போல கட்டணங்கள் நிர்ணயிக்கப்படலாம். ட்விட்டரில் கணக்கு தொடங்க கட்டணம் விதிக்கப்படலாம். இதை சில நெட்டிசன்கள் ‘‘ஒரு ட்வீட்டுக்கு 5 ரூபாயா’’ என கிண்டல் செய்கின்றனர். எப்படி இருந்தாலும் எலான் மஸ்கின் கட்டுப்பாட்டடில் வந்த பிறகு ட்வீட்டர் கட்டணத்துக்குள் வருவதற்கே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என மஸ்க் விரும்புகிறார். ட்விட்டர் அல்காரிதத்தை ஓபன் சோர்ஸாக மாற்றுவதை எலான் மஸ்க் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் கடந்த மாதம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளார். ட்வீட் எந்தெந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வைரலாகிறது என்பதை மக்கள் பார்க்க முடியும்.

ஊழியர்கள் நிலை

இதுமட்டுமின்றி ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கும் நிலையில் தற்போதைய அதன் ஊழியர்கள் பலரும் வேலை நீக்கத்துக்கு ஆளாகலாம். ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவிக்கையில் ‘‘ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது’’ எனக் கூறியுள்ளார்.

பாரக் அகர்வால்

ஊழியர்கள் பலருக்கும் ட்விட்டர் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன. பாரக் அகர்வால் ஆண்டுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாக பெறுகிறார். இதனை தவிர ட்விட்டர் நிறுவனத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பங்குகள் தருவதை மஸ்க் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி கருத்து சுதந்திரத்துக்கு எதிராக அவர்கள் செயல்படுவதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்து வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE