அதிகரிக்கும் கரோனா; கெடுபிடிகள் காட்டும் ஹாங்காங்: விமான சேவையை நிறுத்தியது ஏர் இந்தியா

By செய்திப்பிரிவு

ஹாங்காங்: அதிகரித்து வரும் கரோனா காரணமாக ஹாங்காங் அதிகாரிகள் விதிக்கும் பல்வேறு கெடுபிடிகளை ஒட்டி அந்நாட்டுக்கான விமான போக்குவரத்துச் சேவையை ஏப்.19 தொடங்கி 23 ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.

ஹாங்காங்கில் அண்மைக்காலமாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்குக்கான விமான சேவைகளை நிறுத்துவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹாங்காங் அதிகாரிகள் விதிக்கும் கெடுபிடிகளாலும், ஹாங்காங்குக்கான விமான சேவைக்கான தேவை குறைவாக இருப்பதாலும் ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங்குக்கு இயக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் ஒமிக்ரான் XE திரிபு கரோனா பரவி வரும் சூழலில் அந்நாட்டுக்கு இந்தியாவில் இருந்து பயணிகள் தங்கள் பயணத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் எடுத்த கரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாடு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஹாங்காங் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு இரண்டு வாரங்கள் தடை விதித்திருந்தது. இப்போது ஹாங்காங் செல்லும் விமானங்களை சில நாட்களுக்கு ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE