உலக மசாலா: உலகம் முழுவதும் ஒரே மொழி!

மொழி தெரியாத இடங்களுக்குப் பயணம் செய்வது மிகக் கடினமான காரியம். ஆனால் ஐகான்ஸ்பீக் இருந்தால் போதும், எந்த நாட்டுக்கும் சிரமம் இல்லாமல் சென்று வந்துவிடலாம். டி-சர்ட்டில் ஐகான்ஸ்பீக் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காட்டி, நமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். தண்ணீர், பாத்ரூம், கார், பைக், சைக்கிள், தங்கும் அறை, விமானம், மழை, வெப்பம், மலை, காபி, பூட்டு, போன், பாட்டு, உணவு, கேமரா, கடிகாரம், புத்தகம், மருத்துவமனை, ஏடிஎம் என்று அடிப்படை விஷயங்கள் 40 படங்களாக டி-சர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளன.

இதை அணிந்துகொண்டு, தேவையான விஷயத்தை படத்தில் சுட்டிக் காட்டி, தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பாஷை புரியாதவர்களுக்கு இதன் மூலம் எளிதாக விளக்கிவிட முடியும். ஐகான்ஸ்பீக் உருவாக்கியவர்கள் ஜார்ஜ் ஹார்ன் மற்றும் ஃப்ளோரியன் நாஸ்ட். நண்பர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு ஆசியா முழுவதும் பயணம் சென்றனர். ’’நாங்கள் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவில்லை. குக்கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டோம். அப்போதுதான் மொழி தெரியாத கஷ்டத்தைப் புரிந்துகொண்டோம். உடனே இதற்கு ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தோம்.

மொழியால் ஏற்படும் பெரிய இடைவெளியைக் குறைப்பதற்காகப் பல விதங்களில் முயற்சி செய்து பார்த்தோம். இரண்டு ஆண்டுகளில் ஐகான்ஸ்பீக் டி-சர்ட்டை உருவாக்கிவிட்டோம்’’ என்கிறார் ஜார்ஜ் ஹார்ன். நீளக் கை, குட்டைக் கை, கை இல்லாத டி-சர்ட் என்று 3 விதங்களில் ஐகான் டி-சர்ட்கள் கிடைக்கின்றன. ஐகான்ஸ்பீக் வெப்சைட் மூலம் உலகம் முழுவதும் யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியும். ‘‘எங்கள் ஐகான்ஸ்பீக் கண்டிப்பாக எல்லோருக்கும் உதவும். அடிப்படை விஷயங்களை மட்டுமே இவற்றின் மூலம் பெறமுடியும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்’’ என்கிறார் ஃப்ளோரியன் நாஸ்ட்.

உலகம் முழுவதும் ஒரே மொழி!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, சாதனைக்காகவும் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயது அலெஜண்ட்ரோ ஃப்ராகோசோ என்பவர், 94 மணி நேரம் தொடர்ந்து டிவி பார்த்து, புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் 92 மணி நேரம் டிவி பார்த்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். மல்டி மீடியா சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்று, இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அலெஜண்ட்ரோ போட்டியில் இறங்கியதில் இருந்து அவரது மனம், உடல் நிலை மருத்துவரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. டிவி மாரத்தான் முடிவதற்குள் இதயத் துடிப்பு அதிகரித்தது, தூக்கத்துக்காகக் கண்கள் கெஞ்சின. நல்லவேளை, அலெஜண்ட்ரோவுக்குப் பெரிய பாதிப்புகள் நிகழவில்லை. சீனாவில் 2014-ம் ஆண்டு உலகக் கால்பந்தாட்டத்தைக் காண்பதற்காக, 4 இரவுகள் தொடர்ந்து டிவி பார்த்த பலர் மாரடைப்பால் இறந்து போனார்கள்.

ஐயோ… கொடுமையான சாதனையாக இருக்கே…

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE