கீவ் நகரை கைப்பற்றுவதில் தோல்வி: உக்ரைன் போருக்கு புதிய படைத் தளபதியை நியமித்த புதின்

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஒன்றரை மாதத்திற்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில் புதிய படைத் தளபதியை நியமித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவத் தாக்குதலை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். அன்றிலிருந்து ஒன்றரை மாதமாக தாக்குதல் நடந்து வரும் நிலையில், உக்ரைனின் தலைநகரான கீவ் நகரைக் கைப்பற்றுவதில் ரஷ்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் ரஷ்யா தனது போர் இலக்காக கிழக்குப் பகுதியை மாற்றியுள்ளது. கிழேக்கே உள்ள லுஹான்ஸ்க், டானட்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கிய டான்பாஸ் உள்ளிட்டப் பகுதிகளில் தனது கவனத்தை குவித்துள்ளது. இவை எப்போதுமே ரஷ்யாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கொண்ட பகுதி தான் டான்பாஸ்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, போலந்து என மேற்கத்திய நாடுகள் பலவும் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை வழங்கிவரும் நிலையில், ரஷ்யா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. கார்கிவ், கீவ், செர்னோபில் எனப் பகுதிகளில் இருந்தும் ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளன. மரியுபோல் இன்னும் ரஷ்யக் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் போரை வழிநடத்த புதிய கமாண்டரை அறிவித்துள்ளார். ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டரான அலெக்ஸாண்டர் ட்வார்னிகோவை புதிய கமாண்டராக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் 9 ஆம் தேதி (மே 9) ரஷ்யா வெற்றி தினம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்திய இந்த நாளை ரஷ்யா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. அதற்குள் உக்ரைன் மீது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காகவே அதிபர் புதின் போர் கமாண்டரை மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுக்கான படைத் தளபதி அலெக்ஸாண்டர் ட்வார்னிகோ

மே 9 ஆம் தேதிக்குள் ரஷ்யா இன்னும் உக்கிரமான கொடூர தாக்குதல்களை உக்ரைன் மீது நிகழ்த்தலாம் என்று கூறப்படுகிறது. புச்சா நகரப் படுகொலைகள் போல் பல அரங்கேறலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், நேற்று உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா 5 ஆளில்லா ராணுவ வாகனங்கள், 4 ஏவுகணைகள், 3 போர் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் ஆகியனவற்றை இழந்ததாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் சென்றுள்ளார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் போர் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் போரிஸ் ஜான்சன், நான் இன்று எனது நண்பரான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இங்கிலாந்தின் ஆதரவைத் தெரிவித்தேன். நாங்கள் உக்ரைன் மக்களுக்கு தோள் கொடுக்கிரோம். உக்ரைனுக்கு மேலும் நிதி, ராணுவ உதவிகள் செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளேன். ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அவை தேவை என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE