கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை - பாதுகாப்பான நாடு என மகன் கூறியதாக தந்தை உருக்கம்

By செய்திப்பிரிவு

ஒட்டாவா: கனடாவில் இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் வாசுதேவ் (21). இவர் கனடாவின் டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்தார். மெக்ஸிகன் ஓட்டலில் பகுதிநேர ஊழியராகவும் பணியாற்றி வந்தார்.

கடந்த வியாழக்கிழமை ஓட்டல் பணிக்கு செல்வதற்காக ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் கார்த்திக் வாசுதேவ் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கார்த்திக்கின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கனடாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "மாணவர் கார்த்திக் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கார்த்திக் வாசுதேவின் தந்தை ஜிதேஷ் வாசுதேவ் கூறியதாவது:

கனடா பாதுகாப்பான நாடு என்று எனது மகன் கூறினான். அந்த நாட்டில் எனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். எதற்காக எனது மகன் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து டொரண்டோ போலீஸாரை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவர்கள் இதுவரை எவ்வித பதிலையும் கூறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

19 வெளிநாட்டினர் கொலை

கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் படிக்கும், பணியாற்றும் வெளிநாட்டினரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 19 வெளிநாட்டினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளை விசாரிக்க கனடா அரசு சார்பில் தனிப் படை உருவாக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE