174 வாக்குகள், பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பிரதமர்.. இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவியை இழந்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். நள்ளிரவு வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக அதிக வாக்குகள் விழ, பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார் இம்ரான்.

கடந்த மார்ச் 28-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில், அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனால், பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உருவானது. அதன் காரணமாக இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

வழக்கின் முடிவில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி, இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது. தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்க்கவே, அவர்கள் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது. ஆனால், உடனடியாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை துவங்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். நள்ளிரவு எந்த நேரம் ஆனாலும் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை செய்யத் தயார் என நீதிபதிகள் அறிவிக்க, கைதை தவிர்க்க நள்ளிரவு 12 மணிக்கு 10 நிமிடங்களுக்கு முன் வாக்குப்பதிவு நடத்த சபாநாயகர் அசாத் கைசர் ஒப்புக்கொண்டார்.

இதன்பின்னும், அடுத்தடுத்து ஒத்திவைப்பு, விவாதம் என வாக்கெடுப்பு தள்ளிக்கொண்டே போனது. சபாநாயகர் அடிக்கடி பிரதமர் இம்ரான் கானை சந்தித்து ஆலோசனை நடத்திக்கொண்டே இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி முழங்க ஆரம்பித்தனர்.

ஒருபக்கம் நாடாளுமன்ற காட்சிகள் இப்படி இருக்க, மறுபுறம் இஸ்லாமாபாத் விமான நிலையம் ராணுவ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் விமான நிலையம் வருவதென்றால் அரசின் தடையில்லாச் சான்று வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இம்ரான் கட்சியின் தொண்டர்கள் சில மணித்துளிகளில் நாடாளுமன்ற வாசலில் குவிந்தனர். இப்படியான நாடகங்கள் அடுத்தடுத்து அரங்கேறி பாகிஸ்தானை நள்ளிரவு விழிக்க வைத்தன.

இதனிடையே, நீண்ட இழுபறிக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது. இதன் முடிவுகள் 1.30 மணிபோல் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதன்மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் இம்ரான் கான்.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான். நாட்டின் புதிய பிரதமர் யார் நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்