இலங்கை நெருக்கடி | ஒருபக்கம் பிஸ்கட்டுக்கு கையேந்தும் கரங்கள்... மறுபக்கம் மாறாத ஆடம்பர ஆட்டம்!

By அனிகாப்பா

தொடர்ந்து 13 மணி நேரம் மின்வெட்டு, தெரு விளக்கு எரியத் தடை என இலங்கையின் சாமானிய மக்கள் அன்றாடம் சிரமப்படும் வேளையில், சில கேளிக்கை விடுதிகளின் பூட்டியக் கதவுகளுக்குப் பின்னால் இருந்து கசியும் ஒளிவெள்ளம், அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துள்ள இலங்கைத் தீவு, இதுவரையில் இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தே இல்லை. இத்தனைக்கும் கடந்த 2009-ம் ஆண்டுவரை அந்நாடு உள்நாட்டுப் போரின் கோரப்பிடியில் சிக்கியிருந்தது. 2009-ல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், 2019-ம் ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை நாளில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டது வரை பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் அங்கு நடைபெறவில்லை.

தற்போது, இலங்கைவாசிகள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். 2020-ம் ஆண்டு உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கோவிட் 19 பெருந்தொற்று, அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கம், சுற்றுலா மற்றும் எரிபொருள் மறு ஏற்றுமதியை நம்பியிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது. சுற்றுலா கொண்டு வந்த பொருளாதாரம் முடங்கியதால் நாட்டின் அந்நியச் செலாவணி மிகவும் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் தீவு தேசம் மிகவும் திணறியது.

பெருங்கடனில் மூழ்கி பொருளாதார நெருக்கடியால் நாட்டில் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு, எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. இதன் உச்சமாக தொடர்ந்து 13 மணி நேரம் மின்வெட்டு, மின்சாரச் சிக்கனத்திற்காக இரவில் தெருவிளக்குகளை அணைக்க உத்தரவு என மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கப் பெறாமல் அவதிப்படும் மக்கள் தன்னிச்சையாக வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். அப்படி நடந்த போராட்டப் பேரணி ஒன்றில் நீண்ட கம்பொன்றில் இரண்டு ரொட்டித் துண்டுகளை குத்தியபடி ஒருவர் கோபமாக கத்தும் புகைப்படம் ஒன்று இலங்கையின் அவலத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரும் அங்குள்ள அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டுப் போரில் கதாநாயகனாக பார்க்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை இழந்துள்ளார். அவரின் தவறான பொருளாதாரக் கொள்கையும், சீன நட்பும் இலங்கையை இந்த நிலைக்கு தள்ளிவிட்டதாக கருதும் மக்கள் "வீட்டுக்குக்கு போங்கள் கோத்தா" என்ற முழக்கங்கள் மற்றும் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர இலங்கை அரசு வெளிநாட்டு உதவிகளை நாடிவருகிறது. இந்தியாவும் சீனாவும் ஆபத்பாந்தவர்களாய் கடனுதவி அளித்துள்ளன. அத்தியாவசிய உதவியாக 3 லட்சம் டன் அரிசி அனுப்புவதாக தெரிவித்துள்ள இந்தியா உடனடியாக 40 ஆயிரம் டன் அரசி மற்றும் டீசலை அனுப்பி வைத்துள்ளது. உண்மையில் இந்த உதவிகள் இலங்கையை உடனடியாக மீட்டுவிடுடாது என்றாலும், இலங்கை பொருளாதாரத்தில் தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதை அங்குள்ள மக்களின் இன்னல்கள் தெரிவிக்கின்றன.

"எங்கள் கடையில் விற்பனை செய்வதற்கு ஒன்றுமே இல்லை. தொழிலாளர்களுக்கு விற்பதற்காக நான் இன்று 5 சப்பாத்திகளை செய்தேன். அதை வாங்கவும் இங்கே யாரும் வரவில்லை" என்கிறார் இலங்கையின் ஊருகோடவாத்தா(Orugodawatta) பகுதியில் சிறிய கடை வைத்திருக்கும் நதீரா. அன்றாட வீட்டுத் தேவைகளுக்காக வேலைக்குச் செல்லும் இலங்கைப் பெண்களுக்கு இன்று இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று அன்றைய சாப்பாட்டிற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ரேஷன் வாங்குவது அல்லது பணத் தேவைக்காக வேலைக்குச் செல்வது. வேலைக்கு சென்றுவிட்டால் அன்றைய குடும்பத்தின் சாப்பாட்டிற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையின் மத்திய நடுத்தர வர்க்க குடும்பங்களின் பெரும்பாலான ஒருநாள் உணவினை ரேஷனில் வழக்கப்படும் பொருள்களே தீர்மானிக்கின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் நீடித்து வரும் 13 மணி நேரம் மின்வெட்டு, இரவில் தெரு விளக்குகள் எரியத் தடை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், சில ஆடம்பர கேளிக்கை விடுதிகளின் பூட்டியக் கதவுகளுக்குப் பின்னால் இருந்து கசியும் ஒளிவெள்ளம், தீவு தேசத்தின் பொருளாதார நெருக்கடியால் அனைத்து தரப்பு மக்களும் ஒரே மாதிரி பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

நீண்ட மின்வெட்டைத் தவிர இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள உயர் வகுப்பு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. "இலங்கையில் உள்ள மேல் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் செல்வந்தவர்கள், ராஜபக்சே அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் முறையாக பணம் சம்பாதிப்பவர்கள் என்று பிரிந்துள்ளனர். செல்வந்தர்களிடம் இருக்கும் பணம் பெரும்பாலும் வெளிநாட்டில்தான் உள்ளது. நேர்மையான உயர் நடுத்தர வர்க்கத்தினரிடம் அவர்களின் இயல்பு வாழ்க்கை வெளிப்படையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து சிறிது வருத்தமே உள்ளது" என்கிறார் சமகி ஜன பலவேகய இளைஞர் அமைப்பின் துணைத் தலைவரும், வெலிகம நகரத்தின் முன்னாள் ஆளுநருமான ரெஹான் ஜெயவிக்ரமே.

'நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் ஆடம்பரத்திற்கான விலை கொடுக்க முடிந்த மக்களுக்காக அதற்கான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. மேலோட்டமாக தேடினாலே நகரின் ஆடம்பர மற்றும் இரவு விடுதிகளில் நடக்கும் கேளிக்கை விருந்துகள் பற்றி அறிய முடிகிறது. ஒன் கேல்லி ஃபேஸ் மால் போன்றவைகள் தொடர்ச்சியாக இயங்கின.

இலங்கையின் முக்கியமான கேசினோக்களில் ஒன்றான பால்லிஸ் (Bally’s) கேசினே-வின் அன்றாட நிகழ்ச்சிகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெரிய அளவிலான சுற்றுலா பயணிகள் குழு ஒன்று இலங்கையின் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களுடன் சேர்ந்து அங்கு விளையாடி மகிழ்கின்றனர். அந்த கேளிக்கை விடுதி நிர்வாகத்தினருக்கு அங்கு வரும் பலரை தனிப்பட்ட முறையில் அறிமுகமும் உண்டு. அவர்களில் பலர் இந்தியாவிலிருந்து கேளிக்கைகளுக்காக இலங்கை செல்பவர்கள்.

கடந்த கரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் பால்லிஸ் (Bally’s) மீண்டும் 2021-ல் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து சராசரியாக தினமும் 500 முதல் 600 விருந்தினர்கள் அங்கு வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை 1000-ஐ நெருங்கும். 24 மணிநேரமும் இயங்கும் இந்த கேளிக்கை விடுதியின் ஜெனரேட்டர்கள் தடையின்றி இயங்க மணி நேரத்திற்கு 75 லிட்டர் எரிபொருள் தேவை' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இலங்கையில் நிலவும் நெருக்கடியின் காரணமாக வாய்ப்பில்லாதவர்கள் தான் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு தேடுகின்றனர். உயர் வகுப்பு தாய்மார்களோ நெருக்கடி தரும் மன அழுத்தத்தைத் தவிர்க்க தங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுத் தேதிகளை திட்டமிடுகிறார்கள். வசதியுள்ள தம்பதிகள் தங்களை திசைதிருப்பிக் கொள்வதற்காக தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்துகொள்கிறார்கள்.

வெளியில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் ஆடம்பர பப் ஒன்றில் இருவர் இப்படி பேசிக்கொள்கின்றனர். ’புதிய வீடு கட்ட, ஓடுகள், மூலப் பொருள்களை இறக்குமதி செய்வது சிரமாக இருக்கிறது.அதன் விலையுயர்வு பெருமூச்சு விடவைக்கிறது’ என ஒருவார் கவலை தெரிவிக்க, தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் ஜெனரேட்டர் வாங்க தான் வழங்கிய நன்கொடையைப் பற்றி பெருமிதம் பேசுகிறார் மற்றொருவர்.

தகவல் உறுதுணை: தி பிரின்ட்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE