போர்க்குற்றம் என்றால் என்ன?  - உக்ரைனில் புதின் நிகழ்த்திய அட்டூழியங்களும், 3 போர்க்குற்ற முகாந்திரங்களும்

By அனிகாப்பா

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் உக்ரைனின் கீவ் மற்றும் அதன் அருகில் இருக்கும் புச்சா நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியதும், உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் கோரமான முகத்தை இந்த உலகம் உணரத் தொடங்கியது.

புச்சா நகரத்தில் இருந்து சுமார் 410 பொதுமக்களின் உடல்களை உக்ரைனிய படைகள் கண்டெடுத்தன. கண்டெடுக்கப்பட்டவர்களின் கை,கால்கள் பின்னால் கட்டப்பட்டு, தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர். இந்தக் கொலை வெறியில் இருந்து குழந்தைகளும் தப்பிக்க முடியாமல் போனதுதான் பெரும் சோகம்.

இந்தக் கொலைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இந்தப் படுகொலைகள் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்" என்று கூறினார். புதினை "போர்க்குற்றவாளி" என அழைத்த பைடன், புச்சா படுகொலைகளை இனப்படுகொலை என அழைக்கவில்லை.

ஆனால், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியோ, "இறந்தவர்கள் அனைவரும் இனப்படுகொலைக்கு பலியானவர்களே, அவர்கள் (ரஷ்யர்கள்) இந்த நாடு மற்றும் மக்கள் அனைவரையும் அழித்தொழிக்க விரும்புகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

சில நேரத்தில் போர்க்குற்றமும் இனப்படுகொலையும் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சட்டத்தின் கீழ் அவற்றுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை ஆய்வறிஞர்கள் விளக்குகின்றனர்.

'போர்க்குற்றம் என்றால் என்ன?' என்ற சிக்கலான கேள்விக்கான பதிலையும், 'விளாடிமிர் புதின் ஏன் உண்மையான, உடனடியான குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்?' என்பது இங்கே விளக்கப்படுகிறது.

போர் குற்றம் என்றால் என்ன? - சர்வதேச சட்டத்தின்படி போர்க்குற்றம் என்பது நீண்ட விளக்கத்தைக் கொண்டது. இது இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர் மற்றும் அமைதிக்கான ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்களுக்குள் சர்வதேச சட்டங்கள் எளிதில் தனது ஆளுமையை செலுத்த முடியாது.

பொதுவாக போர்க்குற்றங்கள் என்பதை, "அதிகப்படியான அழிவு, துன்பம் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பைக் குறிக்கும்" என்கிறார் மனித உரிமைகள் மற்றும் சட்ட அறிஞரான ஷெல்லி இங்க்லிஸ். மேலும் அவர், "பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, கட்டாய இடப்பெயர்ச்சி போன்ற பிற நடவடிக்கைகளும் போர்க்குற்றமாக கருதப்படும்" என்கிறார்.

ஷெல்லி இங்க்லிஸ் கூற்றுப்படி, ரஷ்யா நீண்ட போர்க்குற்ற வரலாற்றைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சிரியாவில் நடந்த போரில் ரஷ்யா நேரடியாகவே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதைப்போலவே ஜார்ஜியா மற்றும் கிரீமியாவில் நடந்த மோதல்களிலும் நடந்துகொண்டது.

உக்ரைனின் புச்சாவில் கொல்லப்பட்ட தனது கணவரின் மரணத்திற்கு துக்கம் கடைபிடிக்கும் பெண்மணி

உக்ரைனில் இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களில் ஈடுபடுகிறாரா புதின்? - "ரஷ்யா நேரடியாக பொதுமக்களைத் தாக்கிக் கொலை செய்வதன் மூலம் போர்க்குற்றங்களைச் செய்கிறது என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன" என்கிறார் மனித உரிமைகள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான ஆய்வறிஞர் அலெக்சாண்டர் ஹிண்டன்.

பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கிய ரஷ்ய படைகள், சுமார் 1,417 பொதுமக்களை கொலை செய்தும், 2,038 பேரைக் காயப்படுத்தியும் இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

"ஒரு தேசிய, கலாசார, மதரீதியான இனக்குழுக்களை பகுதியாகவோ, முழுவதுமாகவோ அழித்தொழிப்பதே இனப்படுகொலை என்றால், இனப்படுகொலையில் ரஷ்யா ஈடுப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன" என்கிறார் ஹிண்டன்.ரஷ்யா செய்துள்ள பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களின் வரலாறு இனப்படுகொலைகளுக்கான முன்னறிவிப்பேயாகும். உள்நாட்டு அரசியல் எழுச்சி, எதிரிகளை கொடூரமானவர்களாக சித்தரித்து, இனப்படுகொலையை நியாயப்படுத்தும் பிரச்சாரம் ஆகியவை இனப்படுகொலைக்கான இன்னபிற அறிகுறிகள். இந்த அனைத்து வகையிலும் ரஷ்யாவின் நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொண்டுள்ளது.

ரஷ்யா இனப்படுகொலை நடவடிக்கையில் ஈடுபட்டதா? - "குழந்தைகள் உள்பட ஆயிரக்கான உக்ரைனியர்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக தனது நாட்டிற்கு கடத்தியது. பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்கியிருக்கிறது. ஒரு மகப்பேறு மருத்துவமனையை குண்டு வீசித் தாக்கியுள்ளது" என்கிறார் ஹிண்டன்.

உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலை நிகழ்த்துவதற்கான ஆபத்துக்கள் நிறைய உள்ளன. அல்லது, அங்கு ஏற்கெனவே இனப்படுகொலையைத் தொடங்கியிருக்கலாம்.

போர்க்குற்றத்திற்காக புதின் தண்டிக்கப்படுவாரா? - உக்ரைனில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தியதற்காக, புதின் சிறைதண்டனை அனுபவிப்பதோ, அதிகாரத்தில் இருந்து தூக்கி ஏறிப்படுவதோ உடனடியாக நடந்து விடாது. காரணம், சர்வதேச அளவிலான போர்குற்ற நடவடிக்கைகளை விசாரிக்க மூன்ற சட்ட அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவை: சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு சர்வதேச போர் தீர்ப்பாயங்கள்.

கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் நிகழ்த்திய போர்க் குற்றங்களை விசாரித்து, அவர்களுக்கு தண்டனையையும் இந்த அமைப்புகள் வழங்கியுள்ளன. இதில் லிபிரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டைலருக்கு வழங்கப்பட்ட தண்டனையும் அடங்கும்.

அரசியல் அறிவியல் அறிஞர்களான ஜோசப் ரைட் மற்றும் ஏபெல் எஸ்க்ரிபா, "இந்த மூன்று அமைப்புகளின் மூலம் ஒருவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பது என்பது நம்ப முடியாத அளவிற்கு கடினமானதாகவும், நேரம் எடுத்துக்கொள்வதாகவும் இருக்கும். உக்ரைனில் புதினின் நடவடிக்கைளின் மீது இந்த மூன்று சர்வதேச அமைப்புகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" என்கின்றனர் இருவரும்.

புதின் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்பதற்கான முக்கியமான காரணம், சர்வதேச நீதிமன்றம் அரசுகளின் நடவடிக்கைகளில்தான் கவனம் செலுத்துகிறதே தவிர புதின் மாதிரியான தனிப்பட்ட தலைவர்களின் மீது இல்லை.

மற்றொரு காரணம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்யா உறுப்பினர்களாக இல்லை. அதனால், அதன் அதிகார வரம்பு ரஷ்யாவின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. மேலும், சர்வதேச நீதிமன்றத்திற்கென தனியாக போலீஸ் படை இல்லை என்பதால், குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வர மற்ற நாடுகளின் உதவியையே அவை நாட வேண்டியிருக்கிறது.

"புதின் ஆட்சியில் நீடிக்கும் பட்சத்தில், அவரைக் கைது செய்வது என்பது ஒருபோதும் நடக்காது" என்று கூறும் ரைட் மற்றும் ஏபெல் எஸ்க்ரிபா, "புதினை ஒரு போர்க்குற்றவாளி என்று அழைப்பதும், அவர் மீது போர்க்குற்றம் சுமத்துவது பொதுமக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கத் தவறிவிடும் என்பதற்கும் சில சான்றுகளும் உள்ளன.

ஒரு மோதல் முடிவுக்கு வந்தவுடன் தண்டனையின் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவர்கள், மீண்டும் சண்டையை நீடிக்க ஓர் ஊக்கத்தைத் பெறுகிறார்கள். அட்டூழியங்களுக்குத் தலைமை தாங்கும் தலைவர், தான் பதவியை விட்டு வெளியேற்றப்படுவதை தவிர்ப்பதற்காக, முன்பை விட மிருகத்தனமான வழிமுறைகளையும், அதிகமான அட்டூழியங்களையும் பயன்படுத்துவதற்கான வலுவான உந்துதலை கொண்டிருப்பார்" என்கிறார்கள்.

- போம்பியூ ஃபபிரா பல்கலை.யின் அரசியல் மற்றும் சமூக அறிவியல் இணைப்பேராசிரியர் ஏபெல் எஸ்க்ரிபா ஃபோல்ச், நெவார்கிலுள்ள ரட்ஜர்ஸ் பல்கலை.யின் மானுடவியல் துறை பேராசிரியர் மற்றும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமைகள் ஆய்வு மையத்தின் இயக்குநர், அலெக்சாண்டர் ஹிண்டன், பென் மாநிலத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஜோசப் ரைட் மற்றும் டேட்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஷெல்லி இங்க்லிஸ் ஆகியோரிடம் 'தி கான்வர்சேஷன்’ அரசியல் மற்றும் சமூகம் பகுதிக்கான செய்தி ஆசிரியர் எமி லிபெர்மன் எடுத்த பேட்டியின் தமிழ் வடிவம் இது.

தகவல், படங்கள் உறுதுணை: தி கான்வர்சேஷன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்