'நீ நெல்லு கொண்டு வா... நான் உமி கொண்டு வர்றேன்...' - உக்ரைன் வரை நீளும் 'பெரியண்ணன்' அமெரிக்காவின் 'சம்பவங்கள்'!

By அனிகாப்பா

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவை எதிர்கொள்வதில் வரையறுக்கப்பட்ட விருப்பங்களையே அமெரிக்கா கொண்டுள்ளது. தன் நலனுக்காக பிற தேச நலன்களை பலிகொடுக்கும் அமெரிக்காவின் பெரியண்ணன் மனப்பான்மைக்கு மீண்டும் ஒரு நாடு பலியாவதை உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் "ரியல் பொலிடிக்" என்ற அரசியல் கோட்பாட்டின்படி நடந்து வருகிறது. உக்ரைனுக்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் எந்த ஒரு ராணுவ நடவடிக்கையிலும் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை. சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட பத்திரிகையின் பத்தியொன்றில் பத்திரிகையாளர் மட் பய், "அதிபர் ஜோ பைடன் நாம் எல்லோராலும் ஜீரணித்துக்கொள்ளக் கடினமான "ரியல் போலிடிக்" நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்" என்று புலம்பியிருந்தார். மேலும், "உக்ரைனின் தலைவிதி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அமெரிக்கத் துருப்புகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் பைடன் தொடர்ந்து நிராகரிக்க வேண்டும்" என்றும் எழுதியிருந்தார்.

உக்ரைனில் நிலைமை எவ்வளவு மோசமடைவது, அந்நாட்டின் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் குறித்த காட்டுமிராண்டித்தனம் குறித்து உலக நாடுகள் கண்டித்து வந்தாலும், உக்ரைனின் வானில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கக் கோரும் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளுக்கு அமெரிக்காவும், நேட்டோவும் ஒருபோதும் செவிசாய்க்கப் போவதில்லை என்று உலகின் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை தொடர்ந்து கவனித்து வருபவதால், உக்ரைன் - ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் ஒப்பந்தமும் அமெரிக்காவின் "ரியல்பொலிடிக்" நடவடிக்கையை உறுதியாக பிரதிபலிக்கும், அது உக்ரைன் ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவும் இருக்கும் என்று உறுதியாக நம்ப முடிகிறது.

ரியல் பொலிடிக் சித்தாந்தம்: எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், தங்கள் தேச நலனை மட்டும் கவனத்தில் கொள்ளும் வெளியுறவு கொள்கையையும், வெளிநாடுகளில் தங்கள் தேச நலன்களைப் பேணுவதில் தாராளமயத்தை கடைபிடிக்கும் வல்லரசுகளின் அரசியல் தத்துவமே ரியல்பொலிடிக்.

அமெரிக்காவின் இந்தத் தத்துவம் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராய் இருந்து, அரசு செயலாளராகிய ஹென்றி கிஸ்ஸிங்கரில் இருந்து தொடங்குகிறது. இவர்கள் இருவரையும் பற்றிக் குறிப்பிடாமல் "ரியல்பொலிடிக்" பற்றி விவாதிக்கவே முடியாது. ரியல்பொலிடிக் தத்துவத்தை தீவிரமாக கடைபிடித்த இவர்கள், தங்கள் தேசக் கொள்கைகளுக்கு எதிராக கம்யூனிச சீனாவுடன் ஓர் இணைக்கமான போக்கையும் கடைபிடித்தார்கள்.

நிக்சன் - கிஸ்ஸிங்கர்

கிஸ்ஸிங்கர் தான் ஒரு ரியல்பொலிடிக் ஆதரவாளர் என்பதை தொடர்ந்து மறுத்து வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு ஜெர்மனி பத்திரிகை ஒன்றிற்கு அவர் கொடுத்த பேட்டியில், "ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக நான் இதைச் சொல்கிறேன். ரியல்பொலிடிக் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அடிக்கடி என் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அந்த வார்த்தையை நான் பயன்படுத்தியதாக எனக்கு நினைவில் இல்லை. விமர்சகர்களை என்மீது அந்த முத்திரையைக் குத்தி வருகின்றனர்" எனக் கூறியிருந்தார்.

அதே பேட்டியின் இறுதியில் "ரியல்பொலிடிக்"வாதியாக வகைப்படுத்தப்படும் கிஸ்ஸிங்கரின் தொனி இப்படியாக மாறியிருந்தது. "லட்சியவாதிகள் உன்னதமான மனிதர்களாக பார்க்கப்படுகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால், உண்மையான துன்பம் அரசியல்வாதிகளை விட தீர்க்கதரிசிகளிடமிருந்து வருவதாக நான் நம்புகிறேன். ரியல்பொலிடிக் என்பதற்கான விவேகமான வரையறையாக நான் பார்ப்பது, புறச்சூழல்களைக் கணக்கில் கொள்ளாமல் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நாம் வழிநடத்த முடியாது. புறக்காரணிகளை கவனத்தில் கொள்ளாமல் ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க முயல்வது தப்பித்து ஓடுவதற்கு சமமாகும். ஒரு சமூகத்தின் மதிப்புகளை புரிந்து, அதைக் கவனத்தில் கொண்டு, அதன் புறக்காரணிகளின் சாதக, பாதகங்களை உணர்வதே உண்மையான வெளியுறவுக் கொள்கை கலை" தெரிவித்திருந்தார்.

கிஸ்ஸிங்கர் அறநெறியற்ற வெளியுறவுக் கொள்கைக்காக வாதாடவில்லை. மாறாக, வெளியுறவுக் கொள்கை லட்சியவாதத்தால் சூழப்படும்போது, அது தேச நலனை மேம்படுத்துவதற்கான வரம்புகளை அங்கிகரிக்க வேண்டும் என்பதே அவரின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது.

கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவது என்பது மனித உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்கு மதிப்பளிப்பது என்ற அமெரிக்க மக்களின் பாரம்பரிய மதிப்புகளுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பதாகும். நிக்சன் மற்றும் கிஸ்ஸிங்கரைப் பொறுத்தவரை வியாட்நாம் போரை நிறுத்துவது அல்லது அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி அதனை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது, கம்போடியாவில் நடந்த குண்டுவீச்சு உள்ளிட்ட விரும்பத்தகாத நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் குறிக்கிறது. கிஸ்ஸிங்கரின் பதவிக் காலத்தில் கம்யூனிசம் என்பது, சிலியில் மனித உரிமைகளுக்கு எதிரான சர்வாதிகாரியாக இருந்த அகஸ்டோ பினோசேட்-க்கு ஆதரவளிப்பது என்பதாக இருந்து வந்தது.

அகஸ்டோ பினோசேட் உடன் கிஸ்ஸிங்கர்

கிஸ்ஸிங்கருக்கு பிறகான ரீகனின் நிர்வாகத்தில் மத்திய அமெரிக்காவிலுள்ள கம்யூனிச எதிர்ப்பு வலதுசாரிகளுக்கு ஆதரவளிப்பதாக தத்துவம் மாற்றமடைந்திருந்தது.

ரத்தமில்லாத ரியல்பொலிடிக் : போர்களை நியாயப்படுத்துவது மற்றும் அவற்றை நடத்துவது மட்டும் ரியல்பொலிடிக் நிலைபாட்டின் வேலை இல்லை. நிக்சனும் கிஸ்ஸிங்கரும் சீனா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே உருவாகி வரும் பிளவைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர். கடந்த 1949-ம் ஆண்டு, அமெரிக்க ஆதரவுபெற்ற தேசியவாதிகளை சீன கம்யூனிஸ்ட்டுகள் தோற்கடித்து கிட்டத்தட்ட இல்லாமல் செய்த நிலையில், சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த இருவரும் முடிவெடுத்தனர். இந்த முயற்சி 1972-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் நிக்சனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீனப் பயணத்தில் நிறைவேறியது.

தீவிர கம்யூனிச எதிர்ப்பாளரான ரிச்சர்ட் நிக்சன், சீனாவுடனான மேம்பட்ட உறவுகள் அமெரிக்காவின் நலனுக்கு உதவும் என்று நம்பினார். மேலும், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே பிளவை உண்டாக்கி புதிய உலகத்திற்கான பாதையை உருவாக்கினார். நிக்சனின் இந்த செயலால், அவரும், பல அமெரிக்கர்களின் கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாடும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஆனாலும், அமெரிக்காவின் நலனை காப்பாற்றுவதற்காக சித்தாந்தம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை ஆகியவற்றின் பாதுகாவலனாக, ஆதரவாளனாக தன்னைக் கருதிக் கொள்கிறது. இவை அனைத்தும் அமெரிக்காவின் சொந்த நலனில் பாதிப்பு ஏற்படுத்தாத வரை மட்டுமே. சில நேரங்களில் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் அந்நாட்டின் சுய மதிப்புகளையும் மீறி வெளியுறவுக் கொள்கைகளில் தலையீடு செய்வதும் உண்டு. அப்போதெல்லாம் அமெரிக்கரிகளின் கோபம், தங்களின் அறநெறி மதிப்புகளையும் மீறி எதிரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதையே விரும்பியிருக்கிறது.

உதாரணமாக, உலக வர்த்தக மையத் தாக்குதலுக்கு பின்னர், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்காக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு, வெளியுறவுக் கொள்கையில் பெரிய எல்லைக்கோடுகள் அளிக்கப்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர் தொடர்ந்துகொண்டே போனதாலும், அமெரிக்க மக்களின் போர் பற்றிய எண்ணம், அமெரிக்காவின் பெரியண்ணன் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டதாலும், அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த பராக் ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பைடனுக்கு ஆப்கன், ஈராக் போரில் வெற்றியை ஈட்டாத நிலையிலும், போரை நிறுத்த வேண்டிய நெருக்கடி உருவானது.

உக்ரைனின் முடிவு எப்படி இருக்கும்? - அமெரிக்காவின் ரியல்பொலிடிக் வெளியுறவுக் கொள்கையின்படி, உக்ரைனின் உறவை கட்டுப்பாடுகளுடன் பேணுவதே. உக்ரைனைக்கு சாதகமாக ரஷ்யாவுடன் நேரடி மோதலில் ஈடுப்பட்டு தன் சொந்த தேசத்து நலனுக்கு எதிராக நடப்பதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. உக்ரைனில் நடக்கும் சட்டவிரோத போரில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோதிலும், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் நிகழப்போவது இல்லை. ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா நேரடிப் போரில் இறங்கினால், அணு ஆயுத சக்திகளை பயன்படுத்த வித்திடலாம். அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் அபாயகரமானவை. ஏனெனில் அணுசக்தி இல்லாத படைகளில்தான் ரஷ்யாவை விட முன்னணியில் அமெரிக்கா இருக்கிறது.

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் இறங்காத வரையில், அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யா விரும்பும் சில நிபந்தனைகளை உக்ரைன் கட்டாயம் ஏற்கொள்ள வேண்டியது வரும். அது உக்ரைன் சிறிதும் விரும்பாத ரஷ்யாவுடனான பல்வேறு பிராந்திய எல்லைகள் மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் கொண்டதாகக் கூட இருக்கலாம்.

உக்ரைனின் இந்த நிலை அந்நாட்டு மக்களுக்கும், வெளியில் உள்ள உக்ரைன் ஆதரவாளர்களுக்கும் ஜீரணிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், கிஸ்ஸிங்கர் ஆதிக்கம் செலுத்திய "ரியல்பொலிடிக்" கோட்பாடு இன்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதே நிதர்சனம்.

அமெரிக்கா தனது பெரியண்ணன் மனப்பான்மையால், ஈரான் - ஈராக் போரின்போது சர்வாதிகாரி சதாம் உசேன் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதை அறிந்திருந்தும், அவருக்கு ஆதரவளித்தது. 1989-ம் ஆண்டு ஆப்கானில் இருந்து வெளியேறிய பிறகு, ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சிக்கு வழிவகுத்து, அந்நாட்டில் ஓர் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. மனித உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டுக்குள்ளாகும் சவுதி அரேபியாவுடன் நெருங்கிய நட்பை பேணி வரும் அமெரிக்கா தனது சொந்த நலனுக்காக, அதன் மதிப்புகளைப் பின்னுக்கு தள்ளி வருகிறது.

ஈராக், ஆப்கானிஸ்தானைப் போல அமெரிக்க பெரியண்ணன் மனப்பான்மையை நம்பி இந்த முறை உக்ரைன் அகலமாக கால் வைத்துள்ளதன் பலனை அனுபவித்து வருகிறது.

- யுஎஸ்சி டோரன்ஷிப் கலை அறிவியல் கல்லூரியின் சர்வதேச உறவுகள் துறையின் இணைப் பேராசிரியர் ஜெஃப்ரி ஃபில்ட்ஸ் கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

தகவல் - படங்கள் உறுதுணை: தி கான்வர்சேஷன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்